/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளத்தில் மண் சரிந்து விழுந்ததில் வெவ்வேறு இடங்களில் இருவர் பலி
/
பள்ளத்தில் மண் சரிந்து விழுந்ததில் வெவ்வேறு இடங்களில் இருவர் பலி
பள்ளத்தில் மண் சரிந்து விழுந்ததில் வெவ்வேறு இடங்களில் இருவர் பலி
பள்ளத்தில் மண் சரிந்து விழுந்ததில் வெவ்வேறு இடங்களில் இருவர் பலி
ADDED : ஜூலை 01, 2025 12:27 AM

பம்மல், பம்மலில் பாதாள சாக்கடை பணி மற்றும் வில்லிவாக்கத்தில் ரயில்வே மேம்பால விரிவாக்க பணிக்காக தோண்டி பள்ளத்தில் மண் சரிந்ததில், ஒப்பந்த ஊழியர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பம்மலில், பாதாள சாக்கடை திட்டப்பணியின் போது மண் சரிந்து தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
15 அடி பள்ளம்
தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலத்திற்கு உட்பட்ட பம்மல் - அனகாபுத்துார் பகுதிகளில், 211 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
பம்மலில், வி.வி.வி., என்ற நிறுவனமும், அனகாபுத்துாரில் கே.எம்., நிறுவனமும், இப்பணியை மேற்கொண்டு வருகின்றன.
பம்மல், அண்ணா நகர், இளங்கோ தெருவில், 15 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில், சேலத்தைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் அருள், 40, உள்ளிட்ட ஆறு பேர் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று மதியம், பள்ளத்தில் இறங்கி, குழாய் பொருத்தும் பணியில் அருள் ஈடுபட்டிருந்தார். அப்போது, தோண்டியமண் அவர் மீது சரிந்ததில், பள்ளத்தில் இருந்து அவரால் மேலே வரமுடியவில்லை.
சக தொழிலாளர்கள் காப்பாற்ற முயன்றும் முடியாததால், போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் விரைந்து, ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி, அருளை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்ததில், அவர் இறந்தது தெரியவந்தது.
போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல் மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. கொளத்துார் - பாடி மேம்பாலம் நோக்கி செல்லும் 200 அடி சாலையில், வில்லிவாக்கம், தாதங்குப்பம் பகுதி உள்ளது.
இச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை, நெடுஞ்சாலைத் துறையின் சென்னை பெருநகர மேம்பாட்டு திட்டத்தில், விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கின்றன.
துாண்கள் அமைக்க, ஒப்பந்த ஊழியர்கள் நேற்று காலை 11:50 மணியளவில், பொக்லைன் இயந்திரத்தால் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 15 அடி பள்ளத்தில் குழாய் ஒன்று இருப்பது தெரிய வந்தது.
கோரிக்கை
அது, குடிநீர் குழாயா அல்லது கழிவுநீர் குழாயா என, மேலிருந்தபடி தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். அப்போது, ஒப்பந்த தொழிலாளரான உளுந்துார்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ், 27, என்பவர் நின்ற பகுதியில் கொட்டப்பட்டிருந்த மண் சரிந்துள்ளது.
பள்ளத்தில் மண்ணுடன் சுரேஷ் விழுந்தார். அவர் அடியில் சிக்கிக்கொள்ள, முழுதுமாக மண்ணிற்குள் புதைந்தார்.
சக தொழிலாளர்கள் 30 நிமிடங்கள் போராடி, பொக்லைன் இயந்திரத்தால் அவரை மீட்டு, அவசர கால முதலுதவியான சி.பி.ஆர்., கொடுத்துள்ளனர்.
அதேநேரம் விரைவாக செயல்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுரேஷ் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த வில்லிவாக்கம் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி பணியில் ஈடுபட்டதே இரு இறப்புக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அலட்சியமாக செயல்பட்ட ஒப்பந்த நிறுவனம், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.