/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளம்பெண்ணை கடத்திய வாலிபர் உட்பட இருவர் கைது
/
இளம்பெண்ணை கடத்திய வாலிபர் உட்பட இருவர் கைது
ADDED : மே 19, 2025 01:00 AM
புளியந்தோப்பு,:புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 22 வயது இளம்பெண்ணுக்கு, அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்தது.
இந்நிலையில், இளம்பெண்ணுடன் அதே பகுதியைச் சேர்ந்த நைனா முகமது, 22, என்பவர் பழகி வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை, இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற நைனா முகமது, அவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுள்ளார்.
இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், கார் எண்ணை வைத்து, ஓட்டுனர் அர்பத் ரஹும், 21, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
இதில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் பேருந்தில், நைனா முகமது இளம்பெண்ணை கடத்தி செல்வது தெரிந்தது. இது குறித்து மதுரை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மேலுார் சோதனை சாவடியில் வைத்து, பேருந்தை மடக்கிய மதுரை போலீசார், நைனா முகமதுவை பிடித்து இளம்பெண்ணை மீட்டனர். அங்கு சென்ற ஓட்டேரி போலீசார், இருவரையும் சென்னை அழைத்து வந்தனர்.
இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், நட்பாக பழகியதை தவறாக புரிந்து கொண்ட நைனா முகமது, அவரை கடத்தி சென்றது தெரிந்தது. பின், நைனா முகமது மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கார் ஓட்டுனர் அர்பத் ரஹும் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.