/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'காஸ்' சிலிண்டரை உடைத்த இருவருக்கு பலத்த தீக்காயம்
/
'காஸ்' சிலிண்டரை உடைத்த இருவருக்கு பலத்த தீக்காயம்
'காஸ்' சிலிண்டரை உடைத்த இருவருக்கு பலத்த தீக்காயம்
'காஸ்' சிலிண்டரை உடைத்த இருவருக்கு பலத்த தீக்காயம்
ADDED : ஏப் 30, 2025 12:46 AM

வில்லிவாக்கம், வில்லிவாக்கம், சிட்கோ நகரைச் சேர்ந்தவர் மோகன், 50. இவர், சிட்கோ நகர் 48வது தெருவில் பழைய இரும்பு, பிளாஸ்டிக், பேப்பர் உள்ளிட்ட பொருட்களை வாங்கி விற்கும், காயலான் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், அதே பகுதியைச் சேர்ந்த அர்ஷத் மைதீன், 30, என்பவர் பணிபுரிகிறார்.
இந்த நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் ஆட்டோவிற்கு பயன்படுத்தும், 5 கிலோ எடையிலான பழைய காலி காஸ் சிலிண்டரை, எடைக்கு போட்டு, பணம் பெற்று சென்றுள்ளார்.
இதை, மோகன், அர்ஷத் மைதீன் உதவியுடன், நேற்று முன்தினம் இரவு கட்டிங் மிஷினால் உடைக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பலத்த சத்தத்துடன் தீப்பிடித்து எரிந்தது. கடை முழுதும் தீ பரவியதால் பொருட்களும் தீப்பிடித்து எரிந்தன.
இந்த விபத்தில், அர்ஷத் மைதீன் மற்றும் மோகன் ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். சாலையில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 47, என்பவர் மீதும், லேசான தீக்காயம் ஏற்பட்டது.
வில்லிவாக்கம் போலீசார் மூவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடையின் உரிமையாளர், ஊழியர் இருவரும் 55 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து வில்லிவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

