/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருநங்கையை தாக்கிய இரு வாலிபர்கள் கைது
/
திருநங்கையை தாக்கிய இரு வாலிபர்கள் கைது
ADDED : மே 30, 2025 12:09 AM
ஓட்டேரி :ஓட்டேரி, எஸ்.வி.எம்.நகர் கே.பிளாக்கில் வசிப்பவர் திருநங்கை விந்தியா, 23. இவர், வளர்ப்பு தாயான கீதா என்பவருடன் தங்கி உள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்கிற குள்ள கருப்பா என்பவருடன், கீதா பழகி வந்துள்ளார்.
பிரசாந்த் அடிக்கடி கீதாவிடம் பணம் வாங்கி செல்வது வழக்கம். கீதா சமீபகாலமாக பிரசாந்திடம் பேசாமலும், பணம் தராமலும் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த பிரசாந்த், 27 ம் தேதி நள்ளிரவு தன் நண்பர் மோகன்பாபுடன் கீதாவின் வீட்டுக்கு சென்று, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அப்போது, இருவரையும் விந்தியா திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரசாந்த் மறைத்து வைத்திருந்த கத்தியால், விந்தியாவின் தலையில் தாக்கிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். காயமடைந்த விந்தியா, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் வழக்கு பதிந்து, ஓட்டேரியை சேர்ந்த பிரசாந்த் என்கிற குள்ள கருப்பா, 25 ; அயனாவரத்தை சேர்ந்த மோகன்பாபு 21 ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில், பிரசாந்த் மீது ஏற்கனவே 11 குற்ற வழக்குகளும், மோகன்பாபு மீது இரண்டு கொலை முயற்சி வழக்கும் உள்ளன.
***

