/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடை அடைப்பு புழுதிவாக்கத்தில் பாதிப்பு
/
பாதாள சாக்கடை அடைப்பு புழுதிவாக்கத்தில் பாதிப்பு
ADDED : ஏப் 08, 2025 01:31 AM

புழுதிவாக்கம், பெருங்குடி மண்டலம், வார்டு- 186க்கு உட்பட்டது புழுதிவாக்கம். இங்கு அமைந்துள்ள ராமலிங்கா நகர் பிரதான சாலையில், 'மேன்ஹோல்' உடைந்து, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், ராம் நகர் மூன்றாவது தெரு, சங்கரதாஸ் தெரு உட்பட ஐந்து இடங்களில், மேன்ஹோல் வாயிலாக கழிவுநீர் வெளியேறி, தெருக்களில் தேங்குவதுடன், அருகில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் கலக்கிறது.
அதுமட்டுமின்றி, ராமலிங்கா நகர் பிரதான சாலையில், மேன்ஹோல் உடைந்ததால் சாலை உள்வாங்கியுள்ளது. அதனால், அவ்விடத்தில் கனரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக உள்ள அடைப்பை சீர்செய்யாமல், அடைப்பு ஏற்பட்டுள்ள மேன்ஹோலில் 'டீசல் மோட்டார்' வைத்து, பகலில் மட்டும், குழாய் வாயிலாக அடுத்த மேன்ஹோலில் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால், அரசு பணம் வீணாவதோடு, இரவு நேரங்களில் மோட்டார் இயக்கப்படாததால், தெருக்களில் கழிவுநீர் வெளியேறி தேங்குகிறது. இதனால், அப்பகுதிவாசிகள் பாதிக்கப்படுகின்றனர்.
தவிர, சங்கரதாஸ் தெருவிலும் மேன்ஹோல் சேதமடைந்து உள்வாங்கியுள்ளதால், பகுதிவாசிகள் வாகனங்களை இயக்குவதில் சிரமப்படுகின்றனர்.
எனவே, பாதாள சாக்கடை அடைப்பை நீக்கி, மேன்ஹோலை சரிசெய்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

