/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4 மண்டலங்களில் நிரப்பப்படாத காலி பணியிடங்கள் கூடுதல் பொறுப்புகளால் விழி பிதுங்கும் அதிகாரிகள்
/
4 மண்டலங்களில் நிரப்பப்படாத காலி பணியிடங்கள் கூடுதல் பொறுப்புகளால் விழி பிதுங்கும் அதிகாரிகள்
4 மண்டலங்களில் நிரப்பப்படாத காலி பணியிடங்கள் கூடுதல் பொறுப்புகளால் விழி பிதுங்கும் அதிகாரிகள்
4 மண்டலங்களில் நிரப்பப்படாத காலி பணியிடங்கள் கூடுதல் பொறுப்புகளால் விழி பிதுங்கும் அதிகாரிகள்
ADDED : மே 19, 2025 01:09 AM
அடையாறு:சென்னை மாநகராட்சியின் தெற்கு வட்டார இணை கமிஷனர் அலுவலகத்தின் கீழ், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்கள் உள்ளன.
அடையாறை தவிர மீதமுள்ள மண்டலங்கள், விரிவாக்கப் பகுதியானதால், இங்கு சாலை, வடிகால், கட்டடம் என, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு மண்டலத்திலும், ஒரு உதவி கமிஷனர், இரண்டு செயற்பொறியாளர்கள் இருந்தனர். கடந்த ஓராண்டாக, ஒரு செயற்பொறியாளர் வீதம் பணியாற்றினர்.
இந்நிலையில், உதவி கமிஷனர்கள், செயற்பொறியாளர்கள் என, 11 பேருக்கு கண்காணிப்பு பொறியாளர்களாக, கடந்த மாதம் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
ஆனால், இவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களுக்கு, மாற்று அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மாறாக, செயற்பொறியாளர்களே பொறுப்பு மண்டல உதவி கமிஷனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில், இரண்டு செயற்பொறியாளர் பணியிடங்களில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். அவர், உதவி கமிஷனராக செயல்படுவதோடு, இரண்டு செயற்பொறியாளர் பணியையும் சேர்த்து பார்க்க வேண்டிஉள்ளது.
இதனால், சாலை, வடிகால்வாய் போன்ற பணிகளுக்கான மதிப்பீடு தயாரிப்பு, கட்டட அனுமதி, கள ஆய்வு, புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அனைத்தையும் ஒருவரே கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.
மூன்று அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகளை ஒருவரே செய்வதால், மண்டலங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், உதவி கமிஷனர், மண்டல தேர்தல் அலுவலராகவும் இருப்பதால், வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட தேர்தல் தொடர்பாக பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தெற்கு வட்டார இணை கமிஷனர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்ட செயற்பொறியாளர், அடையாறு மண்டல உதவி கமிஷனராகவும், அதே மண்டலத்தில் இரண்டு செயற்பொறியாளர் பணிகள் என, நான்கு பொறுப்புகளில் உள்ளார்.
வெளிநாட்டு அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் நடக்கும்.
ஒவ்வொரு நிகழ்வின்போதும், துாய்மை, சுகாதாரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதில், மாநகராட்சியின் பங்கு அதிகம். இதற்கு, மண்டல உயர் அதிகாரிகள் பணியில் இருப்பது அவசியம்.
நான்கு மண்டலங்களில் வளர்ச்சி, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, உதவி கமிஷனர்கள், செயற்பொறியாளர்கள் நியமிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.