ADDED : ஏப் 25, 2025 12:24 AM

திருவொற்றியூர், அப்பர் குருபூஜையையொட்டி, பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு,திருவொற்றியூர் அப்பர்சாமி கோவிலில் பாலாபிஷேகம் நடந்தது.
திருவொற்றியூரில், அப்பருக்கு சிவபெருமான் காட்சியளித்து, லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட, சிறப்பு பெற்ற, பழமையான அப்பர் சுவாமி கோவில் உள்ளது.
அதன்படி, சித்திரை மாதம், சதயம் நட்சத்திரமான நேற்று காலை, அப்பர் எனும் திருநாவுக்கரசர் குருபூஜையை முன்னிட்டு, சிறப்பு பாலாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
முன்னதாக, திருவொற்றியூர் எல்லையம்மன் கோவிலில் இருந்து, 100 க்கும் மேற்பட்ட பெண்கள், பால்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக, அப்பர் சாமி கோவிலுக்கு வந்தடைந்தனர்.
பின், பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்தில் ஈசன் எழுந்தருளினார். மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள், 'ஓம் நமச்சிவாயா' என விண்ணதிர முழங்கினர்.
நீண்ட காலத்திற்குப்பின் இந்த நிகழ்ச்சி நடந்தது. கோவில் உதவி கமிஷனர் நற்சோணை உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

