/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி ரயில்வே சாலையில் பஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
/
வேளச்சேரி ரயில்வே சாலையில் பஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
வேளச்சேரி ரயில்வே சாலையில் பஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
வேளச்சேரி ரயில்வே சாலையில் பஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
ADDED : டிச 18, 2025 05:29 AM

வேளச்சேரி: வேளச்சேரி, பெருங்குடி மற்றும் தரமணி ஆகிய மேம்பால ரயில் நிலையங்களை இணைக்கும் வேளச்சேரி ரயில்வே சாலை, 80 அடி அகலம், 2.5 கி.மீ., துாரம் கொண்டது.
ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை, பராமரிப்பு பணிக்காக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, 8 கோடி ரூபாயில் சாலை புதுப்பிக்கப்பட்டது.
இந்த சாலையில், பேருந்து வசதி கேட்டு, வேளச்சேரி பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரு கின்றனர்.
சேதமடைந்த சாலையை புதுப்பித்து ஐந்து மாதங்கள் ஆகியும், பேருந்துகள் இயக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, வேளச்சேரி அன்னை இந்திரா நகர் நலச்சங்க தலைவர் குமாரராஜா கூறியதாவது:
தரமணி, டைடல் பார்க், துரைப்பாக்கம் பகுதிகளில், அதிக அளவு ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. மடிப்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், பெருங்குடி போன்ற பகுதிகளில் இருந்து, ஐ.டி., நிறுவனங்களுக்கும் இதர பணிக்கும் செல்கின்றனர்.
ரயில் பயணம் செய்து, பிற பகுதிகளுக்கு செல்வோர் அதிகம். மூன்று ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், மடிப்பாக்கம், டைடல் பார்க், துரைப்பாக்கம், வேளச்சேரி, கிண்டி பகுதிகளில் இருந்து ரயில்வே சாலை வழியாக பெரிய பேருந்து அல்லது சிற்றுந்து இயக்க வேண்டும்.
இதனால், உட்புற சாலையில் வசிப்போர் மிகவும் பயன் பெறுவர். வேளச்சேரி பிரதான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''கள ஆய்வு செய்தபோது, சாலையை புதுப்பித்த பின், அதிக வாகன போக்குவரத்து உள்ளது. பேருந்து இயக்குவது குறித்து, உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றனர்.

