/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வைஷ்ணவா கல்லுாரிகள் தடகள போட்டியில் 'சாம்பியன்'
/
வைஷ்ணவா கல்லுாரிகள் தடகள போட்டியில் 'சாம்பியன்'
ADDED : டிச 25, 2025 05:33 AM

சென்னை: சென்னை பல்கலை சார்பில், ஏ.எல்.முதலியார் நினைவு கோப்பை தடகளப் போட்டிகள், பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நிறைவடைந்தன.
இதில், பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லுாரி மாணவி பிரதிபா, பந்தய துாரத்தை, 24.0 வினாடிகளில் கடந்து, 2000 - 2001ல் எத்திராஜ் கல்லுாரி மாணவி பிரியா ரோஸின் 24.1 வினாடியில் கடந்த சாதனையை முறியடித்து, தங்கம் வென்றார்.
ஏ.எம்., ஜெயின் கல்லுாரி மாணவி தாரணி வெள்ளியும், திருத்தங்கல் நாடார் கல்லுாரி மாணவி ஸ்வேதாஸ்ரீ வெண்கலமும் வென்றனர்.
அதேபோல், 1,500 மீ., ஓட்டத்தில், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லுாரி மாணவி ராவல் வைஷ்ணவி, பந்தய துாரத்தை 4:30.2 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தார்.
ஆண்களுக்கான டெக்கத்லான் போட்டியில், லயோலாவின் மனோஜ்குமார், டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி மாணவர்கள் சுதர்தசன், நவநீதன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர்.
நீளம் தாண்டுதலில், டி.ஜி.வைஷ்ணவா கல் லுாரி மாணவர் சரண், லயோலாவின் ஹேமந்த்பாபு மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். 110 மீ., தடை தாண்டுதலில் டி.ஜி.வைஷ்ணவாவின் அரவிந்த், லயோலாவின் பாரி, டி.ஜி.வைஷ்ணவாவின் ஜெயசந்திரன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.
அனைத்து போட்டிகள் முடிவில், ஆண்களில் அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி, 15 தங்கம், 11 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்களுடனும், பெண்களில் நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி, 16 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடனும், ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றன.

