/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வள்ளுவர்கோட்டம் புனரமைப்பு தாமதம் ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆறு வாரம் கெடு
/
வள்ளுவர்கோட்டம் புனரமைப்பு தாமதம் ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆறு வாரம் கெடு
வள்ளுவர்கோட்டம் புனரமைப்பு தாமதம் ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆறு வாரம் கெடு
வள்ளுவர்கோட்டம் புனரமைப்பு தாமதம் ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆறு வாரம் கெடு
ADDED : ஜன 29, 2025 12:23 AM

சென்னை, நுங்கம்பாக்கத்தில், 1976ம் ஆண்டு வள்ளுவர்கோட்டம் திறக்கப்பட்டது. இது, 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு, 1,330 திருக்குறள்கள், கருங்கற்களில் செதுக்கப்பட்டு, அதற்கான தெளிவுரையும் இடம்பெற்றுள்ளது.
இங்குள்ள கல்தேர், 128 அடி உயரம், 67 மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இன்றி, வள்ளுவர்கோட்டம் சீரழிந்தது. வள்ளுவர் கோட்டத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அரசு முடிவெடுத்தது.
இதற்கான பணிகள்,80 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என, பொதுப்பணித்துறை தெரிவித்தது.
அதன்படி, வள்ளுவர்கோட்டத்தை புனரமைக்கும் பணிகள், கடந்த 2024ம் ஆண்டு துவங்கி நடந்து வருகிறது.
இங்கு, நவீன வசதிகளுடன், 1,400 பேர் அமரும் வகையில் திரையரங்கம், ஒளி, ஒலி காட்சிக்கூடம், குறள் மண்டபம், விற்பனை கூடம், உணவு கூடம் ஆகியவை புதுப்பிக்கும் பணிகள் முடிந்துள்ளது.
வண்ணம் தீட்டுதல்,மின்சாதனங்கள், இருக்கைகள் பொருத்துதல், தோட்டக்கலை உள்ளிட்ட பணிகள் தாமதமாகி வருகின்றன.
வள்ளுவர்கோட்டத்தை பொங்கல் பண்டிகையின்போது, திருவள்ளுவர் தினத்தில் திறக்க அரசு திட்டமிட்டு இருந்தது. வெளிப்புற அழகுப்படுத்தும் பணிகள் முடியாததால், திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், அடுத்த 60 நாட்களில் வள்ளுவர்கோட்டம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக, ஆறு வாரங்களில் புனரமைப்பு பணிகளை முடித்து வெளியேற வேண்டும் என, ஒப்பந்த நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை வாயிலாக கெடு விதிக்கப்பட்டு உள்ளது.

