ஆதார் மையம்
நந்தனம் புத்தகக்காட்சி வெளி அரங்கில், அஞ்சல் துறை சார்பில், ஆதாரின் அனைத்து சேவைகளும் பெறும் வகையில், ஆதார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, காப்பீடு திட்டம், செல்வ மகள் திட்டம் உட்பட, அஞ்சலகத்தின் அனைத்து விதமான கணக்குகளை துவங்கலாம். அரங்கு எண்: 673ல், தங்கள் புகைப்படம் அடங்கிய அஞ்சல் தலை அட்டையை, 300 ரூபாய்க்கு பெறலாம்.
குழந்தைகளுக்கான அரங்கு
புத்தகக்காட்சி, 233, 234ல் அமைந்துள்ள அரங்கில், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அட்டை மற்றும் வரைபடங்களை, 'இங்க் மெட்' எனும் செயலியில் 'ஸ்கேன்' செய்தால், அது குறித்த பாடல்கள் மற்றும் பாடம், மொபைலில் வீடியோவாக வருவதால், குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
அதேபோல் 287ல், முழுதும் குழந்தைகளுக்கான தமிழ்ப்பாடல், கதைகள் விற்பனை செய்யப்படுகின்றன. திருக்குறள், ஆத்திசூடி போன்ற நுால்களை தடிமனான அட்டையில் அச்சிடப்பட்டுள்ளதோடு, அதற்கான விளக்கம் ஆங்கிலத்திலும் அமைந்துள்ளது.
50 சதவீதம் தள்ளுபடி
'எப் 51' அரங்கில் மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இடம்பெற்றுள்ளது. இங்கு, 6ம் நுாற்றாண்டிற்கு முந்தைய தமிழ் செவ்வியல் இலக்கிய நுால்கள் அனைத்தும் விற்பனைக்கு கிடைக்கின்றன. அனைத்து நுால்களுக்கும் 50 சதவீத விலை தள்ளுபடி உண்டு.
தவிர, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்கள், 'பிரெய்லி' முறையில் அச்சிடப்பட்டு, கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விலையின்றி வழங்கப்படுகின்றன. குறிப்பாக, புறநானுாறு, நான்மணிக்கடிகை, பதிற்றுப்பத்து, நானாற்பது, முத்தொள்ளாயிரம், ஐங்குறுநுாறு ஆகிய தமிழ் நுால்கள், பாடல் மற்றும் பொருளுடன் மலையாளத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

