/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'என்ன கவி பாடினாலும்' கிருதி மனமுருகி பாடிய வசுதா ரவி
/
'என்ன கவி பாடினாலும்' கிருதி மனமுருகி பாடிய வசுதா ரவி
'என்ன கவி பாடினாலும்' கிருதி மனமுருகி பாடிய வசுதா ரவி
'என்ன கவி பாடினாலும்' கிருதி மனமுருகி பாடிய வசுதா ரவி
ADDED : ஜன 12, 2025 12:17 AM

'இன்னம் என் மனம்' என்ற சாருகேசி ராக பதவர்ணத்தைக் கொண்டு, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில், தன் கச்சேரியை துவக்கினார் வசுதா ரவி.
லால்குடி ஜெயராமனின் படைப்பான இந்த வர்ணத்தை பாடி, கிருஷ்ண பகவானின் அருளை அரங்கில் நிரப்பினார்.
பின், நாட்டை ராகத்தில், முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய 'மஹா கணபதிம்' என்ற கிருதியை, மங்களகரமான முறையில் பாடினார்.
தமிழ் மொழியில், பல கிருதிகளை இயற்றிய தண்டபாணி தேசிகரின் கிருதிகளில் ஒன்றான, 'எனை நீ மறவாதே' என்ற அம்பாள் பாடலை பாடி, நாட்டில் உள்ள அனைத்து மக்களும், நல்வாழ்வு வாழ அனைத்து நன்மைகளையும் அருள வேண்டும் என்ற பொருளில் பாடினார்.
ஆதி தாளத்தில், ஹரிதாஸ் கிரி சுவாமிகள் இயற்றிய, 'இன்ப கனா ஒன்று கண்டேனடி' எனும் பாடலை பாடி இவர் முடிக்கும் தருணத்தில், சபையினர் அனைவரும் அவருடன் சேர்ந்து பாடினர்.
பின், 'தாயே திரிபுர சுந்தரி' என்ற பாடலை சிறப்பான முறையில், சுத்த சாவேரியில் பாடினார். கச்சேரியின் பிரதான உருப்படியாக, தோடி ராகத்தை எடுத்து, ராக ஆலாபனை வழங்கினார். பக்கபலமாக, வயலினில் அசத்தினார் பாம்பே மாதவன்.
'கார்த்தி கேயா' என்ற கிருதியை நேர்த்தியான முறையில் பாடி, நிரவல், கற்பனை ஸ்வரங்கள், குறைப்பு ஸ்வரங்கள், சர்வ லகு ஸ்வரங்கள் மற்றும் கோர்வைகள் பாடி இவர் முடிக்க, மணிகண்டனின் மிருதங்க பாணியும், சிவராமகிருஷ்ணனின் கடம் பாணியும், தனி ஆவர்த்தனத்தில் கலக்கின. 'என்ன கவி பாடினாலும்' எனும் கிருதியை மனமுருகி பாடி முடித்தார்.
- ரா.பிரியங்கா

