/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை சரிவு
/
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை சரிவு
ADDED : பிப் 15, 2025 08:42 PM
கோயம்பேடு:தமிழகத்தின் பல மாவட்டங்களில் காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், கோயம்பேடு சந்தைக்கு, வரத்து அதிகரித்துள்ளது. தினமும் 7,000 டன் காய்கறிகள் வந்த இடத்தில், தற்போது 10,000 டன் வரத்துள்ளது; இதனால் விலை கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் வெகுவாக குறைந்துள்ளது. பல காய்கறிகள் விலை, கிலோவிற்கு 10 முதல் 30 ரூபாய் குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, ஒரு கிலோ தக்காளி- 10 -- 15 ரூபாய்க்கும்; கேரட் 10 -- 35; பீட்ரூட் 15 -- 30; சவ்சவ் -6 - -10; முள்ளங்கி 8 -- 10; முட்டைக்கோஸ் 6 -- 10; கத்திரிக்காய் 15 -- 25; அவரைக்காய் 15 -- 20 ரூபாய்க்கும் விற்பனையானது.
அதேநேரம், அதிகாலை பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால், கடந்த சில நாட்களாக விற்பனை மந்தமாகவே உள்ளது. இதனால், டன் கணக்கில் காய்கள் தேங்கி, குப்பையில் கொட்டப்படும் நிலைமை உள்ளது. இது குறித்து, கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், ''பேருந்து நிலையம் மாற்றப்பட்டத்தில் இருந்து, கோயம்பேடு சந்தைக்கு மக்கள் வரத்து குறைந்துள்ளது. அதேபோல், சந்தை நுழைவாயல் எண்: 5ல் குப்பை குவிக்கப்பட்டு அசுத்தமாக உள்ளது. இதனால், வீட்டிற்கு காய்கறி வாங்க வரும் மக்கள், காய்கறிகளும் அசுத்தமாக இருக்கும் என, உள்ளே வர தயக்கம் காட்டுகின்றனர்,'' என்றார்.

