/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விநாயகா மிஷன் போட்டிகள்: 100 பள்ளிகள் பங்கேற்பு
/
விநாயகா மிஷன் போட்டிகள்: 100 பள்ளிகள் பங்கேற்பு
ADDED : ஜூலை 09, 2025 11:50 PM

சென்னை,:விநாயகா மிஷன் பல்கலையில், பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கின. இதில், 100 பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.
விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் சென்னை வளாகம் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள், திருப்போரூர் அடுத்த பையனுாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நேற்று துவங்கின.
இதில், ஆண்களுக்கான கால்பந்தில் 28 அணிகள், பெண்களுக்கான எறி பந்தில் 21 அணிகள், வாலிபாலில், ஆண்களில் 38, பெண்களில் 23 அணிகள் பங்கேற்றுள்ளன.
முதல் நாள் போட்டியை, பல்கலை வேந்தர் கணேசன் முன்னிலையில், சுங்கத்துறை ஓய்வு துணை கமிஷனர் அழகேசன், தமிழ்நாடு மாநில வாலிபால் சங்க இணை செயலர் மகேந்திரன், அமெட் பல்கலை விளையாட்டு துறை இயக்குநர் ராம்குமார் ஆகியோர் துவங்கினர்.
கால்பந்து போட்டியில், திருப்போரூர் அரசு பள்ளி, 3 - 0 என்ற கோல் கணக்கில், கேளம்பாக்கம் செயின்ட் மேரிஸ் பள்ளியையும், செட்டிநாடு வித்யாஷிராம் பள்ளி, 3 - 1 என்ற கோல் கணக்கில் வேலம்மாள் போதி கேம்பஸ் அணியையும் தோற்கடித்தன.
ஆண்கள் வாலிபாலில், முகப்பேர் வேலம்மாள் பள்ளி, 25 - 11, 25 - 10 என்ற கணக்கில், திருக்கழுக்குன்றம் ஸ்டார் பப்ளிக் பள்ளியையும், செயின்ட்மேரிஸ் அணி, 25 - 8, 25 - 11 என்ற கணக்கில் சான் அகாடமியையும் வீழ்த்தின.
நெல்லிக்குப்பம் அரசு பள்ளி, 25 - 8, 25 - 6 என்ற கணக்கில் மகாபலிபுரம் அரசு பள்ளியையும், திருப்போரூர் அரசு பள்ளி, 25 - 9, 25 - 11 என்ற கணக்கில் புவனா கிருஷ்ணா பள்ளியையும் வீழ்த்தின. போட்டிகள் தொடர்கின்றன.