சுவர் விளம்பர விவகாரம் த.வெ.க., - தி.மு.க, மோதல்
சுவர் விளம்பர விவகாரம் த.வெ.க., - தி.மு.க, மோதல்
ADDED : ஜூலை 03, 2026 01:26 AM

ஆவடி: சுவர் விளம்பரம் செய்வதற்காக மின் வாரிய சுற்றுச்சுவரை கைப்பற்ற தி.மு.க., - த.வெ.க.,வினர் இடையே ஏற்பட்ட மோதலால், திருமுல்லைவாயலில் இரவில் சலசலப்பு ஏற்பட்டது.
திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகரில் ஆவடி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இதன் 100 அடி சுற்றுச்சுவரை, கடந்த தி.மு.க., ஆட்சியில், முன்னாள் அமைச்சர் நாசரின் ஆதரவாளர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, விளம்பர சுவரொட்டிகளை ஒட்டி அலங்கோலப்படுத்தி இருந்தனர்.
சட்டசபை தேர்தலுக்கு பின், இச்சுற்றுச்சுவரில், 'முடிந்தது மன்னராட்சி; மலர்ந்தது மக்களாட்சி' என, த.வெ.க.,வினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,வினரும் விளம்பர சுவரொட்டிகளை ஒட்டினர்.
இது தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமுல்லைவாயில் போலீசார் வந்து, இருதரப்பிலும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
