/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை - தலைமை செயலருக்கு தீர்ப்பாயம் உத்தரவு
/
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை - தலைமை செயலருக்கு தீர்ப்பாயம் உத்தரவு
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை - தலைமை செயலருக்கு தீர்ப்பாயம் உத்தரவு
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை - தலைமை செயலருக்கு தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : செப் 25, 2024 12:27 AM
சென்னை, சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைப்பது குறித்து, அரசு செயலர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்குமாறு, தமிழக அரசின் தலைமை செயலருக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளால் வேளச்சேரி ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்துள்ளது குறித்தும், நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது.
அவகாசம் தேவை
இது தொடர்பாக, வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசனும் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 'வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்க, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைக்கலாம்' என, யோசனை தெரிவித்தது. இது தொடர்பாக தமிழகஅரசின் கருத்தையும் கேட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தீர்ப்பாயத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் சண்முகநாதன், 'கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில், தமிழக அரசு பசுமை பூங்கா அமைக்க இருப்பது குறித்து நாளிதழ் செய்தி வாயிலாகவே நான் அறிந்தேன். இது தொடர்பாக தமிழக அரசிடம் கேட்டு பதில் தர அவகாசம் தேவை' என்றார்.
அதைத்தொடர்ந்து தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
பள்ளிக்கரணை சதுப்பு நிலம், வேளச்சேரி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு கட்டடங்களை, கிண்டி ரேஸ் கிளப் இடத்திற்கு மாற்றலாம் அல்லது ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலையுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கலாம்.
புது நீர்நிலை
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலர், சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை நடத்தி, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை அமைக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி, முடிவெடுக்க வேண்டும்.
மழை பெய்தால் வெள்ளத்தாலும், மழை பொய்த்தால் வறட்சியையும் எதிர்கொள்ளும் சென்னையில், பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும்.
வழக்கின் அடுத்த விசாரணை வரும் அக்டோபர் 14ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.