/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரும்பாக்கத்தில் 51 ஏக்கர் மட்டுமே சதுப்பு நிலம் 2,000 ஏக்கர் காணோம்! தவறாக பதிவு செய்து விட்டதாக கலெக்டர் பதில்
/
பெரும்பாக்கத்தில் 51 ஏக்கர் மட்டுமே சதுப்பு நிலம் 2,000 ஏக்கர் காணோம்! தவறாக பதிவு செய்து விட்டதாக கலெக்டர் பதில்
பெரும்பாக்கத்தில் 51 ஏக்கர் மட்டுமே சதுப்பு நிலம் 2,000 ஏக்கர் காணோம்! தவறாக பதிவு செய்து விட்டதாக கலெக்டர் பதில்
பெரும்பாக்கத்தில் 51 ஏக்கர் மட்டுமே சதுப்பு நிலம் 2,000 ஏக்கர் காணோம்! தவறாக பதிவு செய்து விட்டதாக கலெக்டர் பதில்
ADDED : செப் 20, 2024 11:54 PM

சென்னை:மொத்தம் 2,055 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரும்பாக்கத்தில், 51 ஏக்கர் மட்டுமே சதுப்பு நிலம் என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், செங்கல்பட்டு கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் பருவமழை நீரை சேமிக்க மட்டுமின்றி, வெள்ளத்தில் இருந்து சுற்றுப்புற பகுதிகளை பாதுகாக்கவும், சதுப்பு நிலம் உள்ளது. வேளச்சேரி முதல் பெரும்பாக்கம் வரை பரவியுள்ள நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதிதான் பெரும்பாக்கம்.
இந்த நிலங்களை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு, 'ராம்சர்' அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்நிலையில், சதுப்பு நிலங்களில் தனியார் கட்டுமானத்திற்காக மண் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
'செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கத்தில், தனியார் கட்டுமான நிறுவனம் 1,400க்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது. இதற்காக சதுப்பு நிலத்தில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள நீர்நிலைகளில், டன் கணக்கில் கட்டுமானப் பொருட்கள் மற்றும் மண் கொட்டப்படுகின்றன. இதனால், ராம்சர் சதுப்பு நில பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதிக்கப்படும்' என, நாளிதழ்களில் செய்தியும் வெளியானது.
அதன் அடிப்படையில் இப்பிரச்னை குறித்து, தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.
'சதுப்பு நில பகுதிக்கு எப்படி பட்டா கொடுக்கப்பட்டது? அந்த நிலத்தின் வகை என்ன என்பது குறித்து, 1911ம் ஆண்டு முதல் உள்ள வருவாய் துறை நில ஆவணங்களை, செங்கல்பட்டு கலெக்டர் தாக்கல் செய்ய வேண்டும்' என, தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதன்படி, தீர்ப்பாயத்தில் செங்கல்பட்டு கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தாலுகா, பெரும்பாக்கம் கிராமத்தில், பெரும்பாக்கம் ஏரி மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து, கட்டடம் மற்றும் சாலை அமைக்கப்பட்டு வருவதாக, நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், வருவாய் துறை நில ஆவணங்களை, தாம்பரம் தாசில்தார் ஆய்வு செய்தார்.
அதன்படி, பிரச்னைக்குரிய நிலம், அரசு புறம்போக்கு மானாவாரி தீர்வை ஏற்பட்ட தரிசு நிலம். ஆனால் தற்போது கணினியில், 'நத்தம் புறம்போக்கு' என, தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
ஆர்.எஸ்.ஆர்., எனப்படும், மறு அளவீடு தீர்வை பதிவேட்டின்படி, பெரும்பாக்கம் கிராமத்தின் மொத்த பரப்பளவு, 2,055 ஏக்கர் 60 சென்ட்.
இதில், 51 ஏக்கர் மட்டுமே, சதுப்பு நிலம். தவிர, வேறு எந்த சதுப்பு நிலமும் பெரும்பாக்கம் கிராமத்தில் இல்லை.
கடந்த 1911ம் ஆண்டு ஆர்.எஸ்.ஆர்., பதிவேட்டின்படி, சர்வே எண்: 286 என்பது, தனி நபர்களுக்கு உரிய விவசாய பட்டா நிலம்.
மேலும், சர்வே எண்: 1 முதல் 445 வரையிலான மொத்த பரப்பிற்கும், யு.டி.ஆர்., எனப்படும், 'புதுப்பித்தல் பதிவேடு திட்ட பட்டா' பதிவேட்டின்படி, சர்வே எண்: 1 முதல் 546 வரை உள்ள பரப்பிற்கும் சரியாக உள்ளது.
ஆர்.எஸ்.ஆர்., பதிவேட்டின் படி, சர்வே எண்: 430ல், 643.90 ஏக்கர் பெரும்பாக்கம் காப்புக்காடு என தாக்கலாகியுள்ள நிலத்திலிருந்து, 51 ஏக்கர் சதுப்பு நிலம் பிரிக்கப்பட்டு உள்ளது.
யு.டி.ஆர்., பதிவேட்டின்படி, பெரும்பாக்கம் காப்புக்காடு என தாக்கலான நிலத்திலிருந்து, சர்வே எண்: 446 முதல் 546 பிரிக்கப்பட்டதற்கான பதிவுகள் மற்றும் ஆவணங்கள் பதிவாகவில்லை.
பெரும்பாக்கத்தில் பல்வேறு தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் பட்டா நிலங்கள் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.