/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெள்ளானுார் சாலை சீரமைப்பு துவக்கம் ரூ.4.27 கோடி மதிப்பீட்டில் பணி
/
வெள்ளானுார் சாலை சீரமைப்பு துவக்கம் ரூ.4.27 கோடி மதிப்பீட்டில் பணி
வெள்ளானுார் சாலை சீரமைப்பு துவக்கம் ரூ.4.27 கோடி மதிப்பீட்டில் பணி
வெள்ளானுார் சாலை சீரமைப்பு துவக்கம் ரூ.4.27 கோடி மதிப்பீட்டில் பணி
ADDED : பிப் 17, 2025 01:34 AM

ஆவடி: ஆவடி அடுத்த வெள்ளானுாரில், ராணுவத்திற்கு சொந்தமான வெள்ளானுார் - அலமாதி பிரதான சாலை உள்ளது. வெள்ளானுார் வேல்டெக் சந்திப்பில் இருந்து அலமாதி பால்பண்ணை கேட் வரை 3.5 கி.மீ., துாரத்தில், 2.5 கி.மீ., சாலை வெள்ளானுார் ஊராட்சி பகுதி வழியாக செல்கிறது.
இந்த சாலையை ஒட்டி, வெள்ளானுார் ஊராட்சியில், முருகன் நகர், ஸ்ரீனிவாசா நகர், ஷீலா நகர், கணேஷ் நகர், சாஸ்திரி நகர் உட்பட 20 நகர்களில் 15,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, கல்லுாரி மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன், வண்டலுார் - மீஞ்சூர் 400 வெளிவட்ட சாலை பணியின்போது, கனரக வாகன போக்குவரத்தால் சாலை சேதமடைந்தது. மக்கள் நலனை கருத்தில் வைத்து, இரண்டரை ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி நிர்வாகம் சேதமடைந்த சாலையில் 'வெட் மிக்ஸ்' கொட்டி தற்காலிகமாக சீரமைத்தது.
ஆனால், ராணுவத்திற்கு சொந்தமான சாலை என்பதால், முழுமையாக சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, வெள்ளானுார் ஊராட்சி நிர்வாகம், 13 குடியிருப்போர் சங்கங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் கடிதங்கள் பெற்று, ஏழு மாதங்களுக்கு முன், சி.வி.ஆர்.டி. எனும் போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திடம் பேச்சு நடத்தியது.
அதேபோல், நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, பொதுமக்கள் நலனை கருத்தில் வைத்து சி.வி.ஆர்.டி., நிறுவனம், இது குறித்து டில்லியில் உள்ள நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தது. அவர்கள், வெள்ளானுார் - அலமாதி பிரதான சாலையை சீரமைக்க, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது.
இந்த நிலையில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 4.27 கோடி ரூபாய் மதிப்பில், தரமான தார்ச்சாலை அமைக்க, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் திட்ட மதிப்பீடு ஒன்றை தயார் செய்தது.
திட்ட மதிப்பீட்டில், 33 சதவீத நிதி, 1.80 கோடி ரூபாயை வெள்ளானுார் ஊராட்சி நிர்வாகம் தயார் செய்தது.
அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன், சாலை சீரமைக்கும் பணி துவங்கி உள்ளது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளானுார் சாலை, வெளிவட்ட சாலையை ஒட்டி இருப்பதால் வாகன போக்குவரத்து அதிகம். சாலையும் படுமோசமாக உள்ளதால், எந்நேரமும் விபத்து அபாயத்தில் பீதியிலே பயணித்தோம். சாலை பணி துவக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
- அழகர்,
சமூக ஆர்வலர், வெள்ளானுார்.
குடியிருப்புவாசிகள் முயற்சி மற்றும் 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு எங்களுக்கு உந்துதலாக செயல்பட்டது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் எடுத்த பெரும் முயற்சியின் பலனாக, பலநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
- பிரபாகரன்,
முன்னாள் ஊராட்சி தலைவர்.

