/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிடப்பில் நுாலக கட்டுமான பணி எம்.பி.,யின் வாக்குறுதி என்னாச்சு?
/
கிடப்பில் நுாலக கட்டுமான பணி எம்.பி.,யின் வாக்குறுதி என்னாச்சு?
கிடப்பில் நுாலக கட்டுமான பணி எம்.பி.,யின் வாக்குறுதி என்னாச்சு?
கிடப்பில் நுாலக கட்டுமான பணி எம்.பி.,யின் வாக்குறுதி என்னாச்சு?
ADDED : பிப் 18, 2026 06:23 AM

காசிமேடு: காசிமேடில் புது நுாலக கட்டுமான பணி, ஆறு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். காசிமேடு, புனித சேவியர் தெருவில் 1992ம் ஆண்டு முதல் இயங்கி வந்த நுாலகம், விரிசல் விழுந்து ஆபத்தான நிலைக்கு மாறியது.
அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், 30 ஆண்டு பழமையான கட்டடத்தை அகற்றி, புது கட்டடம் கட்டித்தர வேண்டும் என, கோரிக்கை வலுத்தது. வடசென்னை தொகுதி எம்.பி., கலாநிதி வீராசாமி, புதிய நுாலகம் கட்டி தருவதாக வாக்குறுதி அளித்தார். அதன் அடிப்படையில், 2 020 கொரோனா காலத்தில் நுாலக கட்டடம் இடிக்கப்பட்டது.
அடுத்த சில ஆண்டுகளில் புதிதாக கட்டப்பட்டு, செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 ஆண்டுகள் கடந்தும், இதுவரை எந்த பணிகளும் நடக்கவில்லை .
இதனால், நுாலகத்தை பயன்படுத்தி வந்த ஏ.ஜி.காலனி, ஜீவரத்தினம் நகர், துரை தெரு, ஜி.எம்.பேட்டை, புனிய சேவியர் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
காசிமேடு, சேவியர் தெரு வில் செயல்பட்டு வந்த நுாலகம், மத்திய மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, வேறு வழியின்றி கன்னிமாரா, அண்ணா நுாலகங்களுக்கு சென்று படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, நுாலகத்தை கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

