/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோலடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எதிர்ப்பை மீறி அமைக்கப்படுவது ஏன்? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
/
கோலடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எதிர்ப்பை மீறி அமைக்கப்படுவது ஏன்? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
கோலடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எதிர்ப்பை மீறி அமைக்கப்படுவது ஏன்? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
கோலடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எதிர்ப்பை மீறி அமைக்கப்படுவது ஏன்? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
ADDED : நவ 05, 2025 02:52 AM
சென்னை: திருவேற்காடு கோலடி கிராமத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, அப்பகுதி மக்களுக்கே விருப்பம் இல்லாதபோது, அந்த திட்டத்தை அங்கேயே அமைக்க ஏன் முனைப்பு காட்ட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி கிராமத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இது, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் கட்டப்படவில்லை எனக்கூறி, கட்டுமான பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவேற்காடு வழக்கறிஞர் எம்.காமேஷ் என்பவர், பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'மனுதாரர் புகாரில் சுட்டிக்காட்டியபடி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறதா என்பது குறித்து, திருவேற்காடு நகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து, மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
'ஆய்வு முடிவில் திருப்தி இல்லை எனில், மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம்' எனக்கூறி, மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தன் புகாரை முறையாக விசாரிக்காமல், திருவேற்காடு நகராட்சி கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காமேஷ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 'மனுதாரரின் புகார் மனுவை இயந்திரத்தனமாக பரிசீலித்து, திருவேற்காடு நகராட்சி கமிஷனர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்' என வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்படியே, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? இத்திட்டம் அமைவதில், அப்பகுதி மக்களுக்கே விருப்பம் இல்லாதபோது, அங்கேயே அத்திட்டத்தை அமைக்க, ஏன் முனைப்பு காட்ட வேண்டும். இதற்கு நிதி ஒதுக்கப்பட்டதா என, கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தமிழக அரசு தரப்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம், ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்றுத்தான் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்படி அமைக்கப்படவில்லை என்பதே, மனுதாரரின் குற்றச்சாட்டு.
அதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதா? இடத்தை இறுதி செய்யாமல் எவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டது என கேள்வி எழுப்பி, மனுவுக்கு விரிவாக பதிலளிக்க உத்தரவிட்டு, நவ., 7ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

