/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிப்பால் திணறும் ஆண்டவர் கோவில் மாடவீதி: அறநிலைய துறை கமிஷனர் தனிக்கவனம் செலுத்துவாரா?
/
ஆக்கிரமிப்பால் திணறும் ஆண்டவர் கோவில் மாடவீதி: அறநிலைய துறை கமிஷனர் தனிக்கவனம் செலுத்துவாரா?
ஆக்கிரமிப்பால் திணறும் ஆண்டவர் கோவில் மாடவீதி: அறநிலைய துறை கமிஷனர் தனிக்கவனம் செலுத்துவாரா?
ஆக்கிரமிப்பால் திணறும் ஆண்டவர் கோவில் மாடவீதி: அறநிலைய துறை கமிஷனர் தனிக்கவனம் செலுத்துவாரா?
UPDATED : செப் 30, 2024 03:52 AM
ADDED : செப் 30, 2024 12:29 AM

வடபழனி ஆண்டவர் கோவில் மாடவீதிகளில், தினம் தினம் புற்றீசலாக முளைத்து வரும் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு அறநிலையத்துறை கமிஷனர் தனிக்கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்றது, நுாற்றாண்டு பழமை வாய்ந்த வடபழனி ஆண்டவர் கோவில். தினமும் நுாற்றுக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்கின்றனர். செவ்வாய், வார விடுமுறை, விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
பக்தர்கள் அவதி
வடபழனி ஆற்காடு சாலையில் இருந்து கோவில் முகப்பிற்கு செல்லும் பிரதான சாலையாக, ஆண்டவர் தெரு உள்ளது. இந்த தெருவின் இருபுறம் உள்ள கடைகள், நடைபாதை மற்றும் சாலையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளன.
அதுமட்டுமல்லாமல், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்வதால், பக்தர்கள் கோவில் நுழைவாயிலை அடையவே, பெரும் பாடுபட வேண்டிய நிலை உள்ளது.
ஸ்தம்பிப்பு
தற்போது, பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று அச்சாலையே ஸ்தம்பித்து விட்டது.
அதேபோல, தெற்கு மாடவீதி மற்றும் வடக்கு மாடவீதிகளில் புற்றீசலாக முளைத்துள்ள நடைபாதை கடைகள், ஆக்கிரமிப்பு மற்றும் வாகனங்களின் ஆக்கிரமிப்பு காரணமாக, பக்தர்களால் நடந்து செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீசார் எச்சரித்தாலும், ஆளுங்கட்சியினரின் 'ஆசி' இருப்பதால், ஆக்கிர மிப்பாளர்கள் அசைந்து கொடுப்பதாக இல்லை.
இதனால், மன அமைதிக்காக கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தங்களின் மனக்குறையை போக்க வரும் பக்தர்கள், பல்வேறு இன்னல்களையும் அனுபவிக்க வேண்டி உள்ளது.
தீர்வு இல்லை
ஒரு கட்டத்தில், 'ஏன் கோவிலுக்கு வருகிறோம்' என்ற விரக்தி ஏற்படும் அளவிற்கு, மாடவீதி நடைபாதை ஆக்கிரமிப்பாளர்களின் செயல்பாடு அமைந்துள்ளதாக பக்தர்கள் புலம்பித் தீர்க்கின்றனர்.
இப்பிரச்னைக்கு மாநகராட்சி, அறநிலையத்துறை, காவல் துறை ஒருங்கிணைந்து தீர்வு காண பக்தர்கள் தொடர் கோரிக்கை வைத்தாலும், இன்றளவில் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
எனவே, அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ஆவன செய்ய வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- -நமது நிருபர்- -