/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி தொழிற்பேட்டை பராமரிப்பை மாநகராட்சி ஏற்பதா? முடிவை கைவிட தொழில் முனைவோர் வலியுறுத்தல்
/
கிண்டி தொழிற்பேட்டை பராமரிப்பை மாநகராட்சி ஏற்பதா? முடிவை கைவிட தொழில் முனைவோர் வலியுறுத்தல்
கிண்டி தொழிற்பேட்டை பராமரிப்பை மாநகராட்சி ஏற்பதா? முடிவை கைவிட தொழில் முனைவோர் வலியுறுத்தல்
கிண்டி தொழிற்பேட்டை பராமரிப்பை மாநகராட்சி ஏற்பதா? முடிவை கைவிட தொழில் முனைவோர் வலியுறுத்தல்
ADDED : நவ 07, 2024 12:12 AM
சென்னை,
சென்னை கிண்டி தொழிற்பேட்டை பராமரிப்பை, மாநகராட்சி ஏற்கும் முடிவை கைவிட வேண்டும்; அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கிண்டி தொழிற்பேட்டை, 404 ஏக்கரில் அமைந்துள்ளது. அங்கு, உற்பத்தி சார்ந்து செயல்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட, 420 நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இதேபோல், 1,200 ஏக்கரில் அமைந்துள்ள அம்பத்துார் தொழிற்பேட்டையில், 1,600 நிறுவனங்கள் செயல்படுகின்றன.
கிண்டி தொழிற்பேட்டையில் மழைநீர் வடிகால், குப்பை சேகரிப்பு, தெரு விளக்கு உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை, தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரே மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், கிண்டி மற்றும் அம்பத்துார் தொழிற்பேட்டைகளின் பராமரிப்பை, சென்னை மாநகராட்சி ஏற்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவை திரும்ப பெறுமாறு, கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிண்டி தொழிற்பேட்டை தொழில்முனைவோர்கள் கூறியதாவது:
கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் வாயிலாக, 10,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தொழிற்பேட்டையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை உற்பத்தியாளர் சங்கமே, சிறப்பு முகமை வாயிலாக மேற்கொள்கிறது.
சிறப்பு முகமையில், கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும், 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவன பிரதிநிதிகள் உள்ளனர்.
பராமரிப்பு பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், கடந்த ஆண்டில், 'மிக்ஜாம்' புயல் வெள்ளப்பெருக்கத்தின்போதும், கிண்டி தொழிற்பேட்டையில்தான் தண்ணீர் தேங்கவில்லை. தொழில் நிறுவனங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த சூழலில், உற்பத்தியாளர் சங்கத்துடன் ஆலோசிக்காமல், தொழிற்பேட்டை பராமரிப்பை, சென்னை மாநகராட்சி ஏற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன. அதன் பணிகள் தரமாக இருக்குமா என்ற அச்சம் உள்ளது.
பராமரிப்பில் கட்டுப்பாடு இருக்கவும் வாய்ப்பிருக்காது. எனவே, தொழிற்பேட்டை பராமரிப்பை, மாநகராட்சி ஏற்கும் முடிவை கைவிட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, அம்பத்துார் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரிடம் கேட்டபோது, 'இந்த விவகாரம் குறித்து, சிட்கோ உயரதிகாரிகளுடன் பேசிய பின் தான் கருத்து கூற முடியும்' என்றனர்.