/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காமராஜர் சாலையில் மையத்தடுப்பு வருமா?
/
காமராஜர் சாலையில் மையத்தடுப்பு வருமா?
ADDED : மார் 04, 2024 01:43 AM
மெரினா:சென்னை, மெரினா காமராஜர் சாலையில், போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில், இந்த காமராஜர் சாலையில் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
பெரும்பாலும், மெரினா அணுகு சாலைக்கு செல்ல, காமராஜர் சாலையைக் கடக்கும் போது, அதிக அளவில் விபத்து நடக்கிறது.மெரினா எழிலகம் அருகில் மற்றும், கண்ணகி சிலை அருகே சுரங்கப்பாதைகள் உள்ளன. இந்த சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி, பலர் சாலையைக் கடந்து செல்கின்றனர்.
அதற்குப் பின், காமராஜர் சாலையை கடப்பதற்கு சுரங்கப்பாதைகள் இல்லை. இச்சாலையில் பொதுப்பணித்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என, பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
இதனால், இங்கு வரும் பொதுமக்கள் சாலையைக் கடக்கும் போது விபத்தில் சிக்கி, உயிர் பலியும் ஏற்படுகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இதே சாலையில், லோடு வேன் - -பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பைக்கில் வந்த இளைஞர் சுதர்சனன் என்பவர் உயிரிழந்தார்.
கடந்த எட்டு மாதங்களுக்கு முன், விவேகானந்தர் இல்லம் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர், கார் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுபோன்ற விபத்துகளுக்கு, காமராஜர் சாலையை பொதுமக்கள் திடீரென கடந்து செல்வது தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
எனவே, இச்சாலையில் நடுவில் மையத்தடுப்பு அமைத்து, விபத்து ஏற்படுவதை தடுக்க, போக்குவரத்து போலீசார் வழிவகை செய்ய வேண்டும்.
பொதுமக்களுக்கு சாலையைக் கடக்க ஏதுவாக, மேலும் சில சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

