/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் முனையமாகுமா திருவொற்றியூர்? மதுரை, காரைக்குடி, திருப்பதிக்கு இயக்க கோரிக்கை
/
பஸ் முனையமாகுமா திருவொற்றியூர்? மதுரை, காரைக்குடி, திருப்பதிக்கு இயக்க கோரிக்கை
பஸ் முனையமாகுமா திருவொற்றியூர்? மதுரை, காரைக்குடி, திருப்பதிக்கு இயக்க கோரிக்கை
பஸ் முனையமாகுமா திருவொற்றியூர்? மதுரை, காரைக்குடி, திருப்பதிக்கு இயக்க கோரிக்கை
ADDED : பிப் 04, 2025 12:17 AM

திருவொற்றியூர்,
வடசென்னையின் வெளியூர் பேருந்து முனையமாக, திருவொற்றியூர் மாற்றப்பட வேண்டும். மதுரை, காரைக்குடி, சேலம், திருநெல்வேலி, புதுச்சேரி, திருப்பதி உள்ளிட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
திருவொற்றியூர், மாதவரம், ஆர்.கே., நகர், ராயபுரம், பெரம்பூர், திரு.வி.க., நகர், துறைமுகம் தொகுதிகளை உள்ளடக்கிய வடசென்னையில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
பெரும்பாலானோர், கன்னியாகுமரி, துாத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, மதுரை, திருச்சி போன்ற தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
பொங்கல், தீபாவளி விடுமுறை தினங்களில், சென்னையில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வாடிக்கை.
வெளியூர் பேருந்து சேவைக்கு, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் செல்ல வேண்டியிருந்தது. இதற்காக, வடசென்னைவாசிகள் குறிப்பாக, திருவொற்றியூர் மக்கள், 23 கி.மீ., துாரம், மாநகர பேருந்தில் பயணிக்க வேண்டியிருந்தது.
தற்போது, கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டு விட்டதால், பயண துாரம், 44 கி.மீ., துாரமாகி உள்ளது. பயண நேரம் 2:30 மணி நேரம் வரை ஆகிறது.
இதனால், வெளியூர் பேருந்து சேவையை பெறுவதில், வடசென்னைவாசிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன், நாகர்கோவில், மதுரை, கோவை, ராமேஸ்வரம், பெங்களூரு, நாகை, தஞ்சாவூர் வழித்தடங்களில், வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
பின் நாளில், படிப்படியாக வெளியூர் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு, தற்போது தினசரி மூன்று பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
திருவொற்றியூரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்து சேவையும் கிடையாது.இதனால், வெளியூர் பயணம் என்பதே பெரும் பிரச்னையாக மாறி உள்ளது.
தாம்பரம், செங்குன்றம், திருவேற்காடு, மாதவரம், கிளாம்பாக்கம், அம்பத்துார், ஆவடி, தி.நகர் போன்ற வழித்தடங்களில், பேருந்துகள் இயக்க வேண்டும்.
இது குறித்து, திருவொற்றியூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், திருவொற்றியூர் நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், இது குறித்து பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
இரண்டரை மணிநேரம் தாமதம்
திருவள்ளூர் மற்றும் கிளாம்பாக்கத்திற்கு, புதிய பேருந்து சேவை ஏற்படுத்த கோரினோம். துாரத்தை காரணம் காட்டி நிராகரித்து விட்டனர். திருவொற்றியூர் பேருந்து நிலையத்திலிருந்து, வெளியூர் பேருந்துகள் இயக்க வேண்டும். காரணம், இங்கிருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு, இரண்டரை மணி நேரமாகி விடுகிறது. பின், வெளியூர் பேருந்து பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, வடசென்னையின் வெளியூர் பேருந்து முனையமாக, திருவொற்றியூர் உருவாக்கப்பட வேண்டும்.
- குரு.சுப்பிரமணி, 68,
செயலர், திருவொற்றியூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்.

