ஆக்கிரமிப்பு அகற்றாத அதிகாரிகளை கண்டித்து பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்
ஆக்கிரமிப்பு அகற்றாத அதிகாரிகளை கண்டித்து பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்
UPDATED : செப் 26, 2026 07:50 PM
ADDED : செப் 26, 2026 07:44 PM
மடிப்பாக்கம்: நடைபாதை ஆக்கிரமிப்பு, வாகன நெரிசலை கட்டுப்படுத்தாத மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து, மடிப்பாக்கத்தில் பா.ஜ., சார்பில் , கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெருங்குடி மண்டலம், 187வது வார்டுக்கு உட்பட்ட மடிப்பாக்கம், அய்யப்பன் நகர் ஏரிக்கரைச் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து, ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்துவதால், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசர காலங்களில், ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும், சபரி சாலை மற்றும் சுற்றியுள்ள பிரதான சாலைகளில் போதிய வாகன நிறுத்துமிட வசதியின்றி வணிக வளாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அங்கு வருவோரும் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் நெரிசல் அதிகரிக்கிறது.
இதுதொடர்பாக பெருங்குடி மண்டல அதிகாரிக்கு 11 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வலியுறுத்தி, மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில், பா.ஜ., சார்பில் நேற்று காலை 11:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
போலீசார் சமரச பேச்சு நடத்தியதை அடுத்து, மதியம் 12:00 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது. இதில் பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்று மாநகராட்சிக்கு எதிராக முழக்கமிட்டனர்.
