/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.25 லட்சம் மோசடி செய்த பெண் கர்நாடகாவில் கைது
/
ரூ.25 லட்சம் மோசடி செய்த பெண் கர்நாடகாவில் கைது
ADDED : நவ 18, 2025 04:44 AM

சென்னை: ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி, மென்பொறியாளரிடம், 24.89 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட பெண்ணை, கிழக்கு சைபர் கிரைம் போலீசார் கர்நாடகா மாநிலத்தில் கைது செய்தனர்.
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் சுதா கார்த்திக், 44; மென்பொறியாளர். கடந்த பிப்., 10ம் தேதி, சேத்துப்பட்டில் உள்ள கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தனது வாட்ஸாப் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய நபர், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறினார். இதை உண்மை என நினைத்து, பல்வேறு தவணையாக, 24.89 லட்சம் ரூபாயை முதலீடு செய்தேன்.
பின், முதலீடு செய்த பணத்திற்கு எந்தவித லாபத்தையும் தராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே, தன்னிடம் மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என, குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், புகார்தாரர் அனுப்பிய வங்கி கணக்கு மற்றும் மொபைல் போன் எண் விபரங்கள் ஆகியவற்றை வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், மோசடியில் ஈடுபட்ட தீபா, 26, என்ற பெண், கர்நாடகா மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. பின் அங்கு சென்ற தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் தீபாவை கைது செய்தனர்.

