ADDED : நவ 29, 2024 12:19 AM

திருவொற்றியூர், பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஐ.டி., பெண் ஊழியர் மின்சார ரயிலில் அடிபட்டு பலியானார்.
திருவொற்றியூர், அண்ணாமலை நகர், ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் சாம்பாபுவின் மகள் ஐஸ்வர்யா, 25. தரமணியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் திரும்பினார்.
திருவொற்றியூர் - அண்ணாமலை நகர் ரயில்வே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, மின்சார ரயிலில் அடிபட்டு, ஐஸ்வர்யா துாக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த அடிபட்டு அவர் ரத்த வெள்ளத்தில், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொடரும் உயிர்பலி
அண்ணாமலை நகர் ரயில்வே கேட் சுரங்கப்பாதை பணி நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனால், மக்கள் செல்ல ஒரு வழி பாதை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில், தெருவிளக்கு வசதி ஏதும் இல்லாததால், சமூக விரோத செயல் அதிகம் நடக்கிறது.
இதனால், அவ்வழியே செல்லும் பெண்களின் கவனம் முழுதும், பாதுகாப்பாக செல்வதிலேயே இருப்பதால், ரயில்வே தண்டவாளத்தை அவசரமாக கடக்கும்போது, விபத்தில் சிக்குகின்றனர். அப்பகுதியில், நான்கு ஆண்டுகளில், 10க்கும் மேற்பட்டோர், ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்.