ADDED : நவ 23, 2024 12:40 AM
அமைந்தகரை, கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர் சுகிதா, 46. இவரது அக்கா சுகந்தாவின் மகன் ரிதிஷ் உடல் நிலை பாதித்து, அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு, அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்பட்டதால், சுகிதா நேற்று முன்தினம் மாலை, தாம்பரத்தில் உள்ள வங்கியில் பணத்தை எடுத்துள்ளார்.
அங்கிருந்து, அவரது அண்ணா லுார்துராஜ், 48 என்பவரின் ஆட்டோவில், அமைந்தகரை நோக்கி இரவு வந்துள்ளார். அப்போது, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் உணவு வாங்குதற்காக சுகிதா இறங்கினார். லுார்துராஜ் ஆட்டோவில் முன் இருக்கையில் இருந்தார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள், ஆட்டோ பின்புறத்தில், 10 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடப்பதாக லுார்து ராஜிடம் கூறினர்.
அந்த பணத்தை எடுப்பதற்காக லுார்து ராஜ் சென்ற நேரத்தில், ஆட்டோவின் பின் இருக்கையில் இருந்த, 3 லட்சம் ரூபாய் பணப்பையை மர்ம நபர்கள், கொள்ளையடித்து இரு சக்கர வாகனத்தில் தப்பினர். ஓட்டுனரை திசை திருப்பி பணத்தை திருடிய மர்ம நபர்களை, அமைந்தகரை போலீசார் தேடி வருகின்றனர்.