/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆலந்துார் பச்சையம்மன் கோவில் ரயில்வே கேட்டில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி மீண்டும் துவக்கம்
/
ஆலந்துார் பச்சையம்மன் கோவில் ரயில்வே கேட்டில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி மீண்டும் துவக்கம்
ஆலந்துார் பச்சையம்மன் கோவில் ரயில்வே கேட்டில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி மீண்டும் துவக்கம்
ஆலந்துார் பச்சையம்மன் கோவில் ரயில்வே கேட்டில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி மீண்டும் துவக்கம்
ADDED : ஜூலை 16, 2025 12:37 AM

கிண்டி - பரங்கிமலை- ரயில் நிலையங்களுக்கு இடையே, எல்.சி., - 14 எனும் பச்சையம்மன் கோவில் ரயில்வே கேட்டில், நடைமேம்பாலம் அமைக்கும் பணி, பல்வேறு தடைகளுக்கு பின் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
கிண்டி - -பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே, ஆலந்துார் பச்சையம்மன் கோவில் ரயில்வே கேட் எல்.சி., - 14 பயன்பாட்டில் இருந்தது. ஆலந்துார், ஆதம்பாக்கம், கிண்டியில் உள்ள மக்கள், அதை அதிகம் பயன்படுத்தி வந்தனர்.
சென்னை நகரில் உள்ள ரயில்வே கேட்களை, 2002ம் ஆண்டு முதல் அகற்றி, சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைக்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்தது.
அதில், பச்சையம்மன் கோவில் எல்.சி., 14 ரயில்வே கேட் பகுதியிலும், சுரங்க நடைபாதை அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, பல ஆண்டுகளுக்கு முன், ரயில்வே துறை மூலமாக, 2.50 கோடி ரூபாயில் பூமி பூஜை போடப்பட்டது. வெளிப்புற பகுதிகளை இணைக்கும் பணியை, சென்னை மாநகராட்சி மேற்கொள்வதாக முடிவானது.
ரயில்வே கேட் மூடப்பட்டதால், கிண்டி, மடுவின்கரையில் இருந்து, ஆலந்துாரில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ - மாணவியர், கடைகளுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஐந்து நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு, 3 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு வரை ரயில்வே சுங்கப்பாதை திட்டப் பணிகள், இரண்டு முறை துவக்கி, நிறுத்தப்பட்டது. சுற்றிச்செல்ல தயங்கிய பலர், ரயில்வே கேட் இருந்த பகுதியில், ஆபத்தாகவே தண்டவாளத்தை கடந்து சென்று வந்தனர்.
இதனால், ரயில் விபத்துகளில் பல உயிர்கள் பலியாகின. இதையடுத்து, ரயில்வே கேட்டின் இருபுறமும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. தண்டவாளங்கள் அருகே சிமென்ட் கற்கள் அடுக்கி வைத்து மூடப்பட்டன.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், ஆலந்துார் நிதிப் பள்ளி அருகே உள்ள எல்.சி., 15 கேட் பகுதியில், 2.81 கோடி ரூபாயில், மாநகராட்சி, தொகுதி எம்.எல்.ஏ., நிதியில் நடைமேம்பால பணி துவக்கப்பட்டது.
இந்த நடைமேம்பாலம், 3 மீ., அகலம், 37 மீ., உயரம், 80 மீ., நீளம் கொண்டது. 20 மீ.,க்கு படிக்கட்டுகள் அமைகின்றன.
தற்போது, எல்.சி., 14 கேட் பகுதியிலும் நடைமேம்பாலம் அமைக்கும் பணியை, தெற்கு ரயில்வே நிர்வாகம் துவக்கியுள்ளது.
இம்முறையாவது அப்பணிகளை கைவிடாமல், விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- -நமது நிருபர் -