/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரேனில் இருந்து மரம் விழுந்து தொழிலாளி பலி
/
கிரேனில் இருந்து மரம் விழுந்து தொழிலாளி பலி
ADDED : ஏப் 13, 2025 02:00 AM

புழல்:புழல், கதிர்வேடு பகுதியில், குஜராத்தை சேர்ந்த சஞ்சித் என்பவருக்கு சொந்தமான மர கிடங்கு உள்ளது.
இங்கு, பர்மா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து, மரங்களை கப்பல் வழியே எடுத்து வந்து, கன்டெய்னர் லாரி வாயிலாக, சென்னையின் பல இடங்களில் இறக்குமதி செய்கின்றனர்.
கதிர்வேடு விநாயகர் கோவில் தெருவில் வசிக்கும் ராஜேஷ் என்கிற ஜான், 33, என்பவர், இந்த மர கிடங்கில், சுமை துாக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
நேற்று மதியம், லாரியில் இருந்து கிரேன் வாயிலாக மரங்களை இறக்கும் பணியில் இருந்தபோது, திடீரென கிரேனில் இருந்த மரம் ஜான் மீது விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே ஜான் தலை நசுங்கி பலியானார்.
தகவல் அறிந்த புழல் போலீசார், ஜானின் உடலை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றியதே விபத்துக்கு காரணம் என கூறி, இறந்தவரின் உறவினர்கள், மர கிடங்கு உரிமையாளரை கைது செய்ய கோரியும், இழப்பீடு கேட்டும் முற்றுகையிட்டனர்.
அவர்களை, போலீசாரும், பகுதி கவுன்சிலரும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

