/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம்
/
சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம்
ADDED : பிப் 06, 2025 12:28 AM

சென்னை, சாம்சங் தொழிற்சாலை, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ளது. பணியாளர்களில் ஒரு பிரிவினர், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2024 செப்., 9 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, அக்., 21 முதல் பணிக்கு திரும்பினர்.
சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தை பதிவு செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஜன., 25ல், 'சாம்சங் இந்திய தொழிலாளர்கள் சங்கம்' அங்கிகரிக்கப்பட்டதாக, தொழிலாளர் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், சி.ஐ.டி.யு.,வில் இருந்து விலகி, நிர்வாகத்திற்கு ஆதரவான கமிட்டியில் சேர, நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாக கூறி, ஜன., 31ல் பணியாளர்கள், நிர்வாக இயக்குநரை சந்திக்க அனுமதி கேட்டனர்.
இந்நிலையில், தொழிற்சாலைக்குள் கூட்டத்தை கூட்டி, பதற்றமான சூழலை உருவாக்கியதாக கூறி, நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த, தொழிற்சங்க நிர்வாகிகள் மூன்று பேரை, 'சஸ்பெண்ட்' செய்து, நிர்வாகம் கடிதம் அளித்தது.
இதை கண்டித்து, 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேற்று, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 'மூவரின் பணி நீக்க ஆணையை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்' என்றனர்.