/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்கலை முன் 'பர்தா' அணிந்து கத்தியுடன் நின்ற வாலிபர் கைது
/
பல்கலை முன் 'பர்தா' அணிந்து கத்தியுடன் நின்ற வாலிபர் கைது
பல்கலை முன் 'பர்தா' அணிந்து கத்தியுடன் நின்ற வாலிபர் கைது
பல்கலை முன் 'பர்தா' அணிந்து கத்தியுடன் நின்ற வாலிபர் கைது
ADDED : ஆக 20, 2025 03:10 AM
சென்னை, பர்தா அணிந்து வந்து, சந்தேகத்திற்கு இடமான வகையில், வெகுநேரமாக சென்னை பல்கலை முன் நின்றிருந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, மூன்று கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேப்பாக்கம், வாலாஜா சாலையில் உள்ள சென்னை பல்கலை நுழைவாயில் அருகே, நேற்று மதியம் பர்தா அணிந்து வந்த பெண், சந்தேகத்திற்கு இடமான வகையில் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தார்.
இது குறித்து, சென்னை பல்கலை காவலாளி, அண்ணாசதுக்கம் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வந்து விசாரிக்கையில், பர்தா அணிந்து வந்தது ஆண் என்பதும், சவுகார்பேட்டை நம்புழியார் தெருவைச் சேர்ந்த கரண் மேத்தா, 24, என்பதும் தெரிய வந்தது.
முன்னுக்கு பின் முரணாக அவர் பதிலளிக்கவே, கையில் இருந்த பையை சோதனை செய்தனர். அதில், மூன்று கத்திகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, அண்ணாசதுக்கம் போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:
நான் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், 72,000 சம்பளத்தில் வேலை பார்த்து வந்தேன். அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, தனியார் வங்கியில் கடன் பெற்று, ஆன்லைனில் துணி வியாபாரம் செய்து வந்தேன். ஆன்லைன் சூதாட்டத்திலும் ஈடுபட்டேன். இதில், 24 லட்சம் ரூபாய் இழந்துவிட்டேன்.
வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால், நெருக்கடிக்கு உள்ளானேன். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். சென்னை பல்கலையில் பயிலும் தோழியை, கடைசியாக சந்தித்து பேசிவிட்டு செல்லலாம் என வந்தேன். தோழியின் வருகைக்காக காத்திருந்த போது தான், போலீசிடம் சிக்கிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தற்கொலை எண்ணத்துடன் வந்தாரா அல்லது கொலை, வழிப்பறி திட்டத்துடன் வந்தாரா என, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.