ADDED : டிச 02, 2024 01:29 AM

அம்பத்துார்:சென்னையில் கனமழையால் மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் இறந்த நிலையில், அம்பத்துாரில் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்.
அம்பத்துார் மேனாம்பேடு, பிள்ளையார் கோவில் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 27; ஆவடியில் உள்ள 'குரோமா' ஷோரூமில், சர்வீஸ் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கலைவாணி, 27. இவர்களுக்கு, ஐந்து, மூன்று வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கலைவாணி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
'பெஞ்சல்' புயல் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் கரையை கடந்தபோது வீசிய பலத்த காற்றால், பிள்ளையார் கோவில் தெருவில் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதை அறியாத விக்னேஷ், குழந்தைகளுக்கு பால் வாங்க இரவு 11:00 மணியளவில், பிள்ளையார் கோவில் தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து, அம்பத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, சென்னையில் நேற்று முன்தினம் மண்ணடி, வேளச்சேரி, கொளத்துார் ஆகிய பகுதிகளில், மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் இறந்தனர். தற்போது, மழையால் மின்சாரம் பாய்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை, நான்காக உயர்ந்துள்ளது.