/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.நகரில் உரிமம் இன்றி செயல்படும் உணவகங்கள் முறைப்படுத்த மண்டல குழுவில் வலியுறுத்தல்
/
தி.நகரில் உரிமம் இன்றி செயல்படும் உணவகங்கள் முறைப்படுத்த மண்டல குழுவில் வலியுறுத்தல்
தி.நகரில் உரிமம் இன்றி செயல்படும் உணவகங்கள் முறைப்படுத்த மண்டல குழுவில் வலியுறுத்தல்
தி.நகரில் உரிமம் இன்றி செயல்படும் உணவகங்கள் முறைப்படுத்த மண்டல குழுவில் வலியுறுத்தல்
ADDED : மே 13, 2025 12:41 AM
கோடம்பாக்கம் :'உரிமம் பெறாமல் செயல்படும் கடைகள், உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
கோடம்பாக்கம் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், மண்டல உதவி கமிஷனர் முருகேசன், செயற் பொறியாளர்கள் பெரியசாமி, இனியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
* கண்ணன், 138 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் :
எம்.ஜி.ஆர்., நகர் மார்க்கெட் கே.கே., சாலையில் குடிநீர் வாரியம் சார்பில் கழிவுநீர் குழாய் பதிக்க, பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்தும் சாலை முறையாக சீர் செய்யப்படவில்லை.
அதே போல், அம்மன் கோவில் குறுக்கு தெருவிலும் சாலை சீர் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அங்கு, புதிய தார் சாலை அமைக்கப்பட உள்ளதால், சாலை வெட்டுகளை விரைந்து சீர் செய்ய வேண்டும்.
* ரவிசங்கர், 129வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் :
விடுபட்ட சாலைகளை கண்டறிந்து தார் சாலை அமைக்க வேண்டும்.
நடராஜன் தெரு, அருணாச்சலம் சாலை, பொன்னியம்மன் கோவில் ஜானகிராமன் தெரு, சீனிவாசன் தெரு, காமராஜர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு தர வேண்டும் என கோரி வருகிறேன்.
இன்னும் வழங்கப்படவில்லை. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
* குடிநீர் வாரிய அதிகாரிகள்: விடுபட்ட பகுதிகளுக்கு கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்டு மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்.
* ஏழுமலை, 133 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: உணவகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் சேகரமாகும் குப்பையை அகற்றும் தனியார் நிறுவனம், மாநகராட்சி குப்பை தொட்டியில் கொட்டிவிட்டு செல்கிறது. இதை தடுக்க வேண்டும்.
தி.நகரில், மாநகராட்சி அனுமதி பெறாமல் பல உணவகங்கள் மற்றும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை முறைப்படுத்த வேண்டும்.
* உமா ஆனந்தனர், 134 வது வார்டு பா.ஜ., கவுன்சிலர்:
மேற்கு மாம்பலம் ராமகிருஷ்ணாபுரம், இரண்டாவது தெருவிற்கு கிரிக்கெட் வீரர் அஷ்வின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதேபோல், மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலையை, சுதந்திர போராட்ட வீரர் எம்.சி., சுப்பிரமணியம் சாலை என, பெயர் மாற்ற வேண்டும் என, இரண்டு ஆண்டுகளாக கேட்டு வருகிறேன்.
லட்சுமி தெருவில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாயைல, குடிநீர் வாரியம் பள்ளம் தோண்டி சீர் குலைத்துள்ளது.
மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறாமல், விண்ணப்பித்துள்ளோம் எனக்கூறி, பலர் கடைகள் மற்றும் உணகவங்களை திறக்கின்றனர். இவற்றை முறைப்படுத்த வேண்டும்.
* பாஸ்கர், 130 வது வார்டு தி.முக., கவுன்சிலர்:
வடபழனி 100 அடி சாலை, அணுகு சாலையில் குடிநீர் குழாய் உடைந்து, பல வாரங்களாக குடிநீர் கசிவு உள்ளது. இதனால், சாலையில் பள்ளம் ஏற்பட்டு, தினமும் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. உடைந்த குடிநீர் குழாயை விரைந்து சீரமைக்க வேண்டும். கங்கையம்மன் கோவில் நான்காவது தெருவில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. அதை சீர் செய்ய வேண்டும்.
* ராஜா அன்பழகன், 141 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் :
சி.ஐ.டி., நகர் முதல் பிரதான சாலையில் குடியிருப்பு பார்க்கிங் இடத்தில், உரிமம் பெறாமல் கேன்டீன் நடத்தப்பட்டு வருகிறது. முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி: உரிமம் பெறாத கடைகள், உணவகங்களை முறைப்படுத்த, மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
**
இவ்வாறு கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.