/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடும்பத் தலைவிகளா? குண்டர் படைகளா? சுய உதவிக்குழுக்களுக்கு "சூனியம்' மைக்ரோ பைனான்ஸ் கைங்கர்யம்
/
குடும்பத் தலைவிகளா? குண்டர் படைகளா? சுய உதவிக்குழுக்களுக்கு "சூனியம்' மைக்ரோ பைனான்ஸ் கைங்கர்யம்
குடும்பத் தலைவிகளா? குண்டர் படைகளா? சுய உதவிக்குழுக்களுக்கு "சூனியம்' மைக்ரோ பைனான்ஸ் கைங்கர்யம்
குடும்பத் தலைவிகளா? குண்டர் படைகளா? சுய உதவிக்குழுக்களுக்கு "சூனியம்' மைக்ரோ பைனான்ஸ் கைங்கர்யம்
ADDED : ஜூலை 11, 2011 09:46 PM
'வெல்லம் திங்கறது ஒருத்தன்; வெரல் சூப்பறது ஒருத்தனா? காசு வாங்கி தின்னது
நீயி; கடன் கட்டுறது நாங்களா? ஒழுங்கா நாங்க கட்டுன காசை செட்டில்
பண்ணீரு' என்கிறார், 'கணீர்' குரலில் அந்த பெண். ''அடியே போக்கத்தவளே,
கம்பனிக்கு கட்ட வேண்டிய காசையும் செட்டில் பண்ணச் சொல்லு; இல்லேன்னா மிச்ச
காசையும் நாமதான் கட்டணும்,'' என்கிறார், மற்றொரு பெண். இதற்கு பதிலேதும்
கூறாது கைக்குழந்தையோடு தலைகுனிந்து நிற்கும் அந்தப் பெண்ணுக்கு 25 வயது
இருக்கும். நிலைமை புரியாது, வீறிடும் குழந்தைக்காக வருத்தப்படும்
பெண்களில் ஒருவர், 'பால் வாங்கிட்டு வாங்க; பாவம் குழந்தைக்கு பசிக்குது
போல' என்கிறார். ஆனாலும், கடன் கட்டுவதாக வாக்குறுதியும், உத்தரவாதமும்
தரும்வரை அப்பெண்ணை நகரவிடவில்லை. 'மனிதாபிமானம் மரத்துப் போனதோ' என,
வருந்தவைக்கும் இது மாதிரியான காட்சிகளுக்கு காரணகர்த்தாக்களாக இருப்பது
'மைக்ரோ பைனான்ஸ்' எனப்படும் நுண்கடன் நிறுவனங்கள். தங்கள் பெயரில்
குழுக்களை உருவாக்கி கடன் வழங்கும், இந்நிறுவனங்கள், அதற்கானத் தவணைத்
தொகையை வசூலித்து கட்டும் பொறுப்பை குழுக்களிடமே ஒப்படைக்கின்றன. குழுவில்,
ஒரு பெண் தவணை கட்டவில்லை என்றாலும் பிற பெண்கள், கட்டாதவர்களுக்கான
தொகையையும் சேர்த்து கட்ட வேண்டும். பிறகு அன்பாகவோ, அதட்டியோ கடன் தொகையை
வசூலிக்க வேண்டியது குழுப் பெண்களின் கடமை. குடும்பத் தலைவிகளை குண்டர்
படையாக மாற்றும் நுண்கடன் நிறுவனங்களின் இந்த செயல்பாடுகளால், பெண்கள்
மத்தியில் குழுவாக இயங்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது. இதனால்,
எதிர்காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களே, அழிந்து போகும் என்பதுதான்
சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. பெண்களின் சேமிப்பு மற்றும் நிர்வாகத்
திறனை அதிகரித்தல், அவர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துதல் என்னும்
நோக்கங்களோடு சுய உதவிக் குழுக்கள் துவங்கப்பட்டன. இதை எட்டுவதற்காக,
பெண்களுக்கு ஆளுமைத் திறன் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்த்தல், குழுவாக
மனப்பான்மையை வளர்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நோபல்
பரிசு பெற்ற, வங்கதேச பொருளியல் அறிஞர் முகமது யூனுஸ் என்பவரால் 1974ல்,
'சுய உதவிக் குழு' என்கிற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது.1986ல் உலக வங்கி
உள்ளிட்ட பன்னாட்டு நிதி நிறுவனங்கள், வளரும் நாடுகளிலுள்ள மக்களை ஏழ்மை
மற்றும் வட்டிக் கடன் கொடுமைகளில் இருந்து மீட்க சுயஉதவிக் குழுக்களின்
செயல்பாட்டை ஆதரிக்கத் துவங்கின. 'நபார்டு' வங்கியின் மூலம், மத்திய அரசு
சுய உதவிக் குழுக்களை ஆதரிக்கத் துவங்கியதன் தொடர்ச்சியாக, 1989ல்
தி.மு.க., அரசால் தமிழகத்தில் இது, முன் மாதிரித் திட்டமாக
அறிமுகப்படுத்தப்பட்டது. பன்னாட்டு வளர்ச்சி நிதியுதவியுடன் எட்டு
மாவட்டங்களில் 75 ஒன்றியங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம்,
அடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின்
நடவடிக்கையால் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியது. தற்போது, தமிழகம் முழுக்க
40 லட்சத்துக்கும் அதிகமான பெண்களை உறுப்பினர்களாக் கொண்ட நான்கு
லட்சத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்குகின்றன. கடந்த தி.மு.க.,
ஆட்சியில், சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியாக
உயர்த்தும் நோக்கத்தில், திருநங்கைகள், பாலியல் தொழிலாளர்கள், மாற்றுத்
திறனாளிகள் என விளிம்பு நிலை மக்களுக்கான குழுக்கள் உருவாக்கப்பட்டன. இது
சமூக ஆர்வலர்கள் இடையே பலத்த வரவேற்பை பெற்றது. ஆனால், இதே கருணாநிதி
ஆட்சியில்தான், நுண்கடன் நிறுவனங்கள் புற்றீசல்கள் போல் தமிழகம் முழுக்க
முளைத்தன. இதன் செயல்பாடுகள்தான், சுய உதவிக் குழு என்னும் பெயரைக்
கேட்டாலே 'சூடு பட்ட பூனை'களாக பெண்கள் ஒதுங்கக் காரணமாக உள்ளதாக
குற்றசாட்டு எழுந்துள்ளது. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் மதிவாணன்
கூறுகையில், ''நுண்கடன் நிறுவனங்களின் இலக்கு வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள
மக்கள்தான். அவர்களிடம், குழு துவங்கினால் ஒரு நபருக்கு பத்தாயிரம் வரை
உடனே கடன் அளிப்பதாக வாக்குறுதி அளிக்கின்றனர். அடகு வைக்கவோ, பிணையமாக
தரவோ ஏதுவுமில்லாத பெண்கள் 30 சதவிதத்துக்கும் மேல் வட்டி எனத் தெரிந்தும்,
அவர்களின் மாயவலைக்குள் விழுகின்றனர். '' சுய உதவிக் குழுக்களின்
பாணியில், குழுக்களை உருவாக்கும் நுண்கடன் நிறுவனங்கள், தவணை செலுத்த
தவறுபவர்களுக்கும் சேர்த்து மற்ற உறுப்பினர்கள் பணம் கட்ட வேண்டும் என்னும்
விதிகளை உருவாக்கியுள்ளனர். இவ்விதிகளுக்குக் கட்டுப்பட்டு,
அடுத்தவர்களுக்காக பணத்தை கட்டும் பெண்களின் குடும்பங்களில் பிரச்னைகள்
உருவாகிறன. இதனால் உண்டாகும் கோபம் தவணைத் தொகை கட்டாதவர்களின் மீது
திரும்புவதுடன், பணம் வசூலித்தே தீர வேண்டும் என்கிற பிடிவாதத்தை
உருவாக்குகிறது. ''விதிகளுக்கு முரணாக அதிக வட்டி வசூலிக்கும்
நிறுவனங்களின், ஏவல் ஆட்களாக மாற்றப்படுவதால் மனமுடையும் பெண்கள், இனி
குழுவே வேண்டாம் என்கிற முடிவுக்கு வருகின்றனர். ''இதனால், குழு
மனப்பான்மை சிதைந்து போகிறது. அரசு ஏராளமான நிதியையும், நேரத்தையும்
செலவிட்டு உருவாக்கிய சுய உதவிக் குழு என்னும் வடிவத்தை, தங்களுக்கு
சாதகமாக மாற்றி பணம் சம்பாதிக்கும் நுண்கடன் நிறுவனங்கள், கடனை வசூலிக்கும்
சாக்கில், அரசு திட்டத்தையும் அதன் நோக்கத்தையும் சீர்குலைக்கின்றன,''
என்றார். ஒரு பெண் தலைமையிலான அரசில், பெண்கள் சந்திக்கும் இத்தகைய
பிரச்னைகளுக்கு நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதே மக்களின்
எதிர்பார்ப்பு. யாரிடம் போய் முறையிடுவது? 'பணம் இருப்பவர்கள் யாரும்
குழுக்கள் துவங்கலாமா' என்கிற நமது கேள்விக்கு பதிலளித்த வக்கீல் மதிவாணன்,
''யார் யாரெல்லாம் குழுக்களை உருவாக்கலாம், உருவாக்கக் கூடாது என்பது
குறித்த விதிகள் எதுவும் இங்கு இல்லை. இது நுண்கடன் நிறுவனங்களுக்கு
சாதகமாகப் போய்
விட்டது. ''இது ஆரோக்கியமானதல்ல. இந்த விஷயத்தில் அரசு உடனே ஒரு
முடிவெடுக்க வேண்டும். நுண்கடன் நிறுவனங்களால் பாதிக்கப்படும் போது,
யாரிடம் முறையிட வேண்டும் என்பது கூட மக்களுக்குத் தெரிவதில்லை. நுண்கடன்
நிறுவன குழுக்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து போலீஸ் ஸ்டேஷனில்
அளிக்கும் புகார்கள், சுய உதவிக் குழுக்களின் பிரச்னைகளாகப் பதிவு
செய்யப்படுவதாகவும் ஒரு தகவல் உண்டு,'' என்கிறார்.
- நமது நிருபர் -