/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட ஊராட்சிக்கு நிதி நிறுத்தம்; கவுன்சிலர்கள் வருத்தம்
/
மாவட்ட ஊராட்சிக்கு நிதி நிறுத்தம்; கவுன்சிலர்கள் வருத்தம்
மாவட்ட ஊராட்சிக்கு நிதி நிறுத்தம்; கவுன்சிலர்கள் வருத்தம்
மாவட்ட ஊராட்சிக்கு நிதி நிறுத்தம்; கவுன்சிலர்கள் வருத்தம்
ADDED : ஜூலை 27, 2011 02:34 AM
கோவை : மாவட்ட ஊராட்சி மூலமாக நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களுக்கான நிதி, திடீரென நிறுத்தப்பட்டதால் கவுன்சிலர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பாக,கோவை மாவட்ட ஊராட்சிக் குழுவில் 27 மாவட்ட கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தி.மு.க.,-12, அ.தி.மு.க.,-8, காங்.,-4, தே.மு.தி.க.,-2, மா.கம்யூ.,-1 என கட்சி பலம் உள்ளது. அடுத்த உள்ளாட்சித் தேர்தல் வரையிலும், தற்போதுள்ள கவுன்சிலர்களின் பதவிக்காலம் நீடிக்கிறது. மற்ற மாநிலங்களைப் போல, தமிழகத்திலுள்ள மாவட்ட ஊராட்சிக்குக் கூடுதல் அதிகாரம், நிதி ஆதாரம் எதுவும் இல்லை. மத்திய, மாநில அரசுகளின் நிதியைக் கொண்டு, மாநில நிதிக்குழு வழங்கும் மானியமே, இந்த மாவட்ட வார்டுகளுக்கு நிதி பிரித்து வழங்கப்படுகிறது. இது ஒவ்வொரு காலாண்டு வீதமாக ஒதுக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் மதிப்புக்கு மாநில நிதிக்குழு மானியம் மூலமாக நிதி ஒதுக்கப்பட்டு, வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தந்த வார்டு கவுன்சிலர் வைக்கும் கோரிக்கைகளுக்கேற்ப வளர்ச்சிப் பணிகளுக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஊராட்சி செயலர் மூலமாக கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. அதன் அடிப்படையில், நிதி ஒதுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்கவுள்ளதால், அடுத்த காலாண்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு கவுன்சில் சார்பில் மாநில நிதிக்குழுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இது வரையிலும் அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படாததோடு, வழக்கமாக ஒதுக்கப்படும் நிதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் பரவியுள்ளது. மாவட்ட ஊராட்சியின் செயலராக இருந்தவர், பணி ஓய்வு பெற்று விட்டதால், தற்போது தணிக்கைத்துறை உதவி இயக்குனரிடம் இப்பொறுப்பு, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் விடுமுறையில் இருப்பதே, பணி நிறுத்தப்பட்டதற்கான காரணமென்று மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் கூறுகின்றனர். உடனடியாக நிதியை ஒதுக்குமாறு மாவட்ட நிர்வாகத்தை இவர்கள் கட்சி பேதமின்றி அணுகியுள்ளனர். ஏற்கனவே நடந்த பணிகளை ஆய்வு செய்தபோது, பல இடங்களில் பணிகளைச் செய்யாமலே அல்லது முடிக்காமலே, 'பில்' கேட்டிருப்பது தெரியவந்ததால்தான், நிதி நிறுத்தப்பட்டிருப்பதாக அலுவலக வட்டாரங்களில் ஒரு தகவல் பரவியுள்ளது. இதில், ஒரு சில பணிகள் பற்றி ரகசிய விசாரணையும் நடந்து வருவதாகத் தெரியவந்துள்ளதால், அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர். பிரச்னை ஏதுமில்லை : மாவட்ட ஊராட்சிக்குழுவின் செயலர் பொறுப்பிலுள்ள உதவி இயக்குனர் (தணிக்கை) அருள்நாதன் ஜோசப்பிடம் கேட்டபோது, ''ஏற்கனவே நடந்த பணிகளுக்கு நிதி வழங்கப்பட வேண்டியுள்ளது. அதுபற்றி தணிக்கை செய்ய வேண்டியிருந்தது. விரைவில் நிதி ஒதுக்கப்படும்; அதில், வேறு எந்த பிரச்னையுமில்லை,'' என்றார்.