/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கதவை தட்டும் கரடிகள்; கலக்கத்தில் மக்கள்
/
கதவை தட்டும் கரடிகள்; கலக்கத்தில் மக்கள்
ADDED : ஜூலை 13, 2011 10:21 PM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே பாரதிநகர் குடியிருப்பில்
நள்ளிரவில் வீட்டுக்கதவை தட்டும் கரடிகளால் பொதுமக்கள் பீதி அடைந்து
உள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையோர கிராமங்களில் ஏற்கனவே காட்டு யானைகளின்
தொல்லை அதிகமாக உள்ளது. விவசாயம், குடியிருப்புகளில் நள்ளிரவில் நுழையும்
யானைகளால் பயிர்களுக்கு பெருத்த சேதம் ஏற்படுகிறது. இவற்றை தடுக்க,
வனத்துறையினர் எடுத்த முயற்சிகளுக்கு போதுமான பலன் இல்லை. இந்நிலையில்,
புதியதாக முளைத்துள்ள கரடித் தொல்லை பொதுமக்களிடையே பீதியை
ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், கூடலூர் பேரூராட்சிக்கு உட்பட்டது
பாரதிநகர். மலை அடிவாரத்தில் உள்ள இக்குடியிருப்புக்கு செல்ல போதுமான சாலை
வசதி, தெருவிளக்கு வசதி இல்லை. குடியிருப்பு பகுதி மலை அடிவாரத்தில்
உள்ளதால், அடிக்கடி வன விலங்குகள் ஊடுருவுவது வழக்கம். சில மாதங்களுக்கு
முன் மலைபாம்பு ஒன்று நுழைந்தது. பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர், அதை
பாதுகாப்பாக பிடித்து வனத்துக்குள் விட்டனர். கடந்த சில நாட்களாக கரடிகள்
பாரதி நகருக்குள் நுழைகின்றன. பொதுமக்கள் கூறுகையில், 'நள்ளிரவில்
வீட்டுமுன் நின்று பலத்த ஓசை எழுப்பும் கரடிகள், வீட்டுக்கதவை நகங்களால்
பிராண்டுகின்றன. இவை நல்ல ஆரோக்கியமாக 'கொழுகொழு'வாக காணப்படுவதால்,
விரட்ட பயமாக உள்ளது. இதனால், விடிய, விடிய உயிர் பயத்துடன்
வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டியுள்ளது. 'தினமும் மாலை 7.00
மணிக்கு மலையடிவாரத்துக்கு வரும் ஆண், பெண் கரடிகள் இங்குள்ள பாறை மீது
அமர்ந்து பலமாக கத்தி ஓசை எழுப்புகின்றன. பின், குடியிருப்பு பகுதிக்குள்
நுழைகின்றன. 'இவற்றை தடுக்க, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும்' என்றனர்.

