/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்
/
கேரளாவுக்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : ஜூலை 14, 2011 09:19 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு டாடாசுமோவில்
கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை
தடுக்க வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி தலைமையில் தனிப்படை
அமைக்கப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் துறை தனித்தாசில்தார்
பாலகிருஷ்ணன் தலைமையில் மீன்கரை ரோட்டில் வளந்தாயமரம் அருகே ரேஷன் அரிசி
கடத்தலை தடுக்க வாகன தணிக்கை செய்யப்பட்டது. அப்போது, கேரளா நோக்கி சென்ற
'கேஎல் 6சி 0379' என்ற எண்ணுள்ள டாடாசுமோவை சோதனைக்கு உட்படுத்தினர்.
வாகனத்தின் டிரைவர் கோவிந்தாபுரத்தை சேர்ந்த மகேஸ்பிரபு(24) முன்னுக்கு
பின் முரணாக தகவல் தெரிவித்ததால், வாகனத்தை பரிசோதனை செய்தனர்.
டாடாசுமோவின் பின்பகுதியில் சோயா தவிடு மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தது.
அதனுள், ஐந்து மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து மூட்டைகளில் இருந்து 250 கிலோ ரேஷன்
அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல்
செய்தனர். விசாரணையில், பொள்ளாச்சி அடுத்த தப்பட்டைகிழவன்புதூரில் இருந்து
கேரளா மாநிலம் கொல்லங்கோட்டுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டது
தெரியவந்துள்ளது. டாடாசுமோ டிரைவர் மகேஸ்பிரபுவை உணவு பொருள் கடத்தல்
தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி, சிவில்
சப்ளை குடோனில் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் வாகனம் சப்-கலெக்டர்
பங்களாவில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.