/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நூறு நாள் திட்ட சமூக தணிக்கை துவங்கியது
/
நூறு நாள் திட்ட சமூக தணிக்கை துவங்கியது
ADDED : செப் 10, 2024 02:09 AM
அன்னுார்:கோவை மாவட்டத்தில், 10 ஊராட்சிகளில் நேற்று சமூகத் தணிக்கை துவங்கியது.
கடந்த 2023--24 நிதியாண்டில், கிராம ஊராட்சியில் செய்யப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் மற்றும் 2016--17 முதல் 2021--2022 வரை செய்யப்பட்ட பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட பணிகள் ஆகியவற்றை வெளிநபர்கள் வாயிலாக சமூக தணிக்கை செய்து, அறிக்கை தயாரித்து, சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பிக்கும்படி, மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி கடந்த செப். 2ம் தேதி முதல் சுற்று கோவை மாவட்டத்தில் 10 ஊராட்சிகளில் நடந்தது. இரண்டாம் சுற்று நேற்று துவங்கியது.
அன்னுார் ஒன்றியத்தில், அக்கரை செங்கப் பள்ளி ஊராட்சி அலுவலகத்தில், சமூக தணிக்கை குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தணிக்கையாளர் கனகராஜ் பேசுகையில், இந்த ஊராட்சியில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 10 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
கடந்த நிதியாண்டில், ஒரு கோடியே 23 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிகள் நடந்துள்ளன. இப்பணிகளை மூன்று நாட்கள் ஆய்வு செய்ய உள்ளோம்.
ஆய்வுக்கு பிறகு சமூக தணிக்கை அறிக்கை வருகிற 13ம் தேதி நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும், என்றார். கூட்டத்தில் தணிக்கையாளர்கள், ஊராட்சித் தலைவர் சிவகாமி சின்னச்சாமி, வார்டு உறுப்பினர்கள், 100 நாள் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
கோவை மாவட்டத்தில், பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் சோமையம்பாளையம், சூலூர் ஒன்றியத்தில் சின்னியம்பாளையம், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் போகம்பட்டி உள்பட 10 ஊராட்சிகளில், நேற்று சமூக தணிக்கை துவங்கியது.