/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற 12 வாரம் கெடு: ஐகோர்ட் அதிரடி வி.என்.ஆர்., நகரில் ரிசர்வ் சைட்களை மீட்குமா மாநகராட்சி?
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற 12 வாரம் கெடு: ஐகோர்ட் அதிரடி வி.என்.ஆர்., நகரில் ரிசர்வ் சைட்களை மீட்குமா மாநகராட்சி?
ஆக்கிரமிப்புகளை அகற்ற 12 வாரம் கெடு: ஐகோர்ட் அதிரடி வி.என்.ஆர்., நகரில் ரிசர்வ் சைட்களை மீட்குமா மாநகராட்சி?
ஆக்கிரமிப்புகளை அகற்ற 12 வாரம் கெடு: ஐகோர்ட் அதிரடி வி.என்.ஆர்., நகரில் ரிசர்வ் சைட்களை மீட்குமா மாநகராட்சி?
UPDATED : மார் 22, 2024 12:28 PM
ADDED : மார் 22, 2024 12:28 AM
-நமது நிருபர்-
வடவள்ளி வி.என்.ஆர்., நகரில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரிசர்வ் சைட்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களுக்குள் அகற்றுமாறு, மாநகராட்சி நிர்வாகத்துக்கு, ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை, வடவள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகில், வி.என்.ஆர்., நகர் உள்ளது. அங்கு 1980லிருந்து 1982 வரை, 12 லே அவுட்கள், நகர ஊரமைப்புத் துறை அங்கீகாரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லே அவுட்களில், பொது ஒதுக்கீட்டு இடங்களாக (ரிசர்வ் சைட்) பல ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பல இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன; வீடுகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
உதாரணமாக, கிணறு மற்றும் மேல்நிலை தண்ணீர்த் தொட்டிக்கு ஒதுக்கப்பட்ட 12 சென்ட் இடத்தில், குடிசைகள் போட்டு வாடகைக்கு விடப்பட்டது. நர்சரி பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட 10 சென்ட் இடத்தில், இரண்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல, மாநகராட்சி ரோடுக்கான இடத்தையும் தங்கள் இடம் என்று சிலர், மாவட்ட கோர்ட்டில் வழக்குகள் தொடுத்திருந்தனர்.
அந்த வழக்குகளில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வழங்கப்பட்டன. அவற்றை எதிர்த்து, வி.என்.ஆர்., லே அவுட் நற்பணி சங்கம் சார்பில், ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடந்த பல்வேறு வழக்குகளையும் விசாரித்து வந்த ஐகோர்ட் நீதிபதிகள் சுப்பிரமணியம், ராஜசேகர் ஆகியோர் கொண்ட அமர்வு, கடந்த பிப்., 26ல் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதில், 'பொது ஒதுக்கீட்டு இடத்தின் வகைப்பாட்டை அதிகாரிகளோ, அரசோ நினைத்தால் கூட மாற்ற இயலாது; தானப் பத்திரம் முறையாக பெறப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி, பொது ஒதுக்கீட்டு இடங்களை வகை மாற்றம் செய்யக்கூடாது. நில வகை மாற்றம், ஆக்கிரமிப்பு மற்றும் அங்கீகாரமற்ற கட்டுமானங்களின் மீது சட்டத்துக்குட்பட்டு தொடர் நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக, ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கைகளை மாநகராட்சி கமிஷனர் நிறுத்தி வைக்க வேண்டியதில்லை. ஆவணங்களை சரி பார்த்து, ஆக்கிரமிப்புகளை முறையாக கண்டறிந்து, அறிவிப்பு வழங்கி, தமிழ்நாடு நிலம் ஆக்கிரமிப்பு சட்டம், 1905-ன் படி தாசில்தார் உதவியுடன் 12 வாரங்களுக்குள் மீட்க வேண்டும்.' என்று கூறியுள்ளனர்.
இதனால், கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்த பொது ஒதுக்கீட்டு இடங்கள் மீட்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றின் இன்றைய மதிப்பு, பல கோடி ரூபாயாகும். ஐகோர்ட் உத்தரவின்படி, இந்த இடங்களை விரைவாக மீட்டு, பூங்கா, விளையாட்டு மைதானம் போன்றவற்றை அமைக்க வேண்டுமென்று, வி.என்.ஆர்., நகர் குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

