/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
/
பவானி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
ADDED : மே 07, 2024 10:24 PM
மேட்டுப்பாளையம்:சிறுமுகை அருகே பவானி ஆற்றில், தேங்கி இருந்த நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த, சிறுமுகை அருகே திம்மராயம்பாளையத்தை சேர்ந்தவர் மூதாட்டி லிங்கம்மாள் மற்றும் அவரது உறவினர் ஜோதி. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரிதுரை.
இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு அபினேஷ் குமார், 10, அவினேஷ், 8, என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். தூத்துக்குடியில் இருந்து சிறுமுகை திம்மராயம்பாளையத்தில் உள்ள, தனது பாட்டி லிங்கம்மாள் வீட்டிற்கு, நேற்று முன் தினம் காலை இருவரும் வந்தனர். ஊரின் அருகே பவானி ஆற்றில் சிறிதளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் அப்பகுதி மக்கள் துணி துவைத்தும், குளித்தும் வருகின்றனர்.
அண்ணன், தம்பி இருவரும் மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த பூர்ணா, 11, என்ற சிறுவனுடன் சேர்ந்து ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர்.
அவர்கள் நீண்ட நேரம் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இரண்டு சிறுவர்களின் அத்தை ஜோதி, தண்ணீரில் இருந்து மேலே வரும்படி கூறியுள்ளார்.
உடனே மூன்று சிறுவர்களும் மேலே வந்து, மீண்டும் வேகமாக தண்ணீரில் குதித்தனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால், நீச்சல் தெரியாத அபினேஷ்குமார், அவினேஷ் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
சிறுவன் பூர்ணாவுக்கு நீச்சல் தெரிந்ததால், கரைக்கு வந்து விட்டான். தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை, ஜோதி தண்ணீரில் இறங்கி காப்பாற்ற முயன்றார்.
ஆனால் முடியவில்லை. ஜோதி சத்தம் போடவே அருகே தோட்டத்தில் இருந்தவர்கள், ஆற்றில் இறங்கி அண்ணன், தம்பி இருவரையும் மேலே துாக்கி வந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, இரண்டு சிறுவர்களும் இறந்திருப்பது தெரிய வந்தது.
இதை பார்த்த கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். இதுகுறித்து சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
கலெக்டர் உத்தரவு காற்றில் பறக்குது
ஆறு மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவும், துணி துவைக்க கூடாது என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். யாரும் குளிக்க செல்லாத வகையில் கண்காணிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
ஆனால் இந்த உத்தரவை யாரும் பின்பற்றாத நிலையில், நேற்று சிறிதளவு தண்ணீரில் இரண்டு சிறுவர்கள் மூழ்கி இறந்தனர்.
இனிவரும் நாட்களிலாவது, ஆற்றில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில், யாரும் குளிக்க செல்லாத வகையில், கண்காணிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் தெரிவித்தனர்.

