/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
20 ஏக்கரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: இடம் இறுதி செய்வாரா அமைச்சர் உதயநிதி
/
20 ஏக்கரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: இடம் இறுதி செய்வாரா அமைச்சர் உதயநிதி
20 ஏக்கரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: இடம் இறுதி செய்வாரா அமைச்சர் உதயநிதி
20 ஏக்கரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: இடம் இறுதி செய்வாரா அமைச்சர் உதயநிதி
ADDED : ஜூன் 14, 2024 12:29 AM

கோவை : கோவையில், 20 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க, நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்று (14ம் தேதி) கோவை வரும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, இவ்விடங்களை ஆய்வு செய்து, இறுதி செய்வாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். 28 ஆண்டுகளுக்கு பிறகு கோவை தொகுதியை தி.மு.க., வென்றிருக்கிறது. இதை கொண்டாடும் வகையில், மாநில அளவிலான முப்பெரும் விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இக்கூட்டத்தில், கோவைக்கான சிறப்பு திட்டங்கள் மற்றும் அதற்கான அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கருணாநிதி நுாற்றாண்டு விழாவை நினைவு கூறும் வகையில், நகரின் மையப்பகுதியில் நவீன நுாலகம் கட்டும் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அமைச்சர் வேலு இரு இடங்களை ஆய்வு செய்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். இடத்தை தேர்வு செய்து, நிதி ஒதுக்க வேண்டும்.
அடுத்த கட்டமாக, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்ய வேண்டியுள்ளது; மைதானம், வீரர்கள் காத்திருப்பு அறை, உடை மாற்றும் அறை, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய மைதானம் உருவாக்க, 20 ஏக்கர் நிலம் தேவைப்படும் என விளையாட்டு துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒண்டிபுதுாரில் ஓரிடம், பாரதியார் பல்கலை அருகே உள்ள இடம், எல் அண்டு பைபாஸ் அருகே உள்ள இடம், மத்திய சிறை மைதானம் என நான்கு இடங்கள், மாவட்ட நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் ஓரிடத்தை தேர்வு செய்ய வேண்டும். இன்று (14ம் தேதி) கோவை வருகை தரும், தமிழக விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி, கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.