/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுமார மடாலயத்தில் 30ம் ஆண்டு குருபூஜை
/
கவுமார மடாலயத்தில் 30ம் ஆண்டு குருபூஜை
ADDED : ஜூன் 13, 2024 02:29 AM

கோவை:கோவை, சின்னவேடம்பட்டியில் உள்ள சிரவை ஆதீனம் கவுமார மடாலயத்தில், 3வது குரு மகா சன்னிதானம் சுந்தர சுவாமிகள் 30ம் ஆண்டு நினைவு குருபூஜை விழா, அறக்கட்டளை சொற்பொழிவு, புலவர் புராணம் ஐந்தாம் பதிப்பு அறிமுக விழா நுால் வெளியீடு, சான்றோர்க்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது.
கல்லுாரி கல்வி முன்னாள் இயக்குனர் குமாரசாமி வரவேற்றார். சிரவை ஆதீனம் கவுமார குமர குருபர சுவாமிகள் தலைமை வகித்து பேசுகையில், ''தண்டபாணி சுவாமிகளின் ஓலைச்சுவடிகளில் உள்ள பாடல்களை, புத்தகமாக வெளியிட உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முன் வந்தது. இதன் முதல் வெளியீடு சென்னையில் நடந்தது. அடுத்த வெளியீடு கோவையில் தற்போது நடந்துள்ளது,'' என்றார்.
விழாவில் ஆறு நுால்கள் வெளியிடப்பட்டன.
'புலவர் புராணத்தில் முருகன் அடியார்கள்' அறக்கட்டளை சொற்பொழிவு நுால், கந்தசாமி சுவாமிகள் பனுவல் திரட்டு மூன்றாம் தொகுதி, கோவை தண்டபாணி சுவாமிகள் - கோவை, சுவாமிகளின் அந்தாதி தொகுதி -- 1, தொகுதி -- 2, தொகுதி -- 3 நுால்களை, ஆதீனங்கள் பெற்றுக் கொண்டனர்.
8,500 பாடல்கள்
நிகழ்ச்சியில், தாமரை பிரதர்ஸ் மீடியா லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''தண்டபாணி சுவாமிகளின், 47,000 பாடல்கள், ஓலைச்சுவடிகளாக உள்ளன. இவற்றில் 8,500 பாடல்கள், அச்சுக்கு வந்து விட்டன. மீதமுள்ள பாடல்களை அச்சிட இன்னும் ஐந்து, ஆறு ஆண்டுகளாகி விடும்,'' என்றார்.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், பழனி சாது சண்முக அடிகள், கோவிலுார் நாராயண ஞான தேசிக சுவாமிகள், தென்சேரிமலை முத்து சிவராம சுவாமி அடிகள், காஞ்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருதுகள்
'வண்ணச்சரபரின் புலவர் புராணத்தில் முருகனடியார்கள்' என்ற தலைப்பில், மதுரை பேராசிரியர் சொக்கலிங்கம் பேசினார்.
தமிழ் சான்றோர்க்கு விருது வழங்கும் விழாவில், மதுரை பேராசிரியர் சொக்கலிங்கம், சாந்தலிங்க அடிகள் தமிழ் கல்லுாரி பேராசிரியர் நாகராஜ், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லுாரி இணைப் பேராசிரியர் சத்திய நாராயணன் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அரசு கலைக் கல்லுாரி முன்னாள் தமிழ் பேராசிரியர் சுப்பிரமணியன், நன்றி கூறினார்.

