/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு 462 பேர் எழுதினர்
/
மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு 462 பேர் எழுதினர்
மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு 462 பேர் எழுதினர்
மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வு 462 பேர் எழுதினர்
ADDED : மே 05, 2024 11:10 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே நடந்த நீட் தேர்வினை,462 மாணவர்கள் எழுதினர். டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அருகே ஜமீன் முத்துார் ஏ.ஆர்.பி., இண்டர்நேஷனல் பள்ளியில், மருத்துவ படிப்புக்கான, நீட் தேர்வு நேற்று நடைபெற்றது.
தேர்வுக்கு வரும் மாணவ, மாணவியர், பள்ளிக்குச்செல்லவும், வரிசையாக செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
காலை, 11:00 மணி முதல், தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு மாணவ, மாணவியராக அனுமதி சீட்டு உள்ளதா என ஆய்வு செய்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மாணவ, மாணவியர் சோதனை செய்த பின்னர் மையத்துக்குள் சென்றனர்.
பொள்ளாச்சி டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் மாணவர்களுடன் வந்த பெற்றோருக்கும் அவ்வப்போது மைக் வாயிலாக, தேர்வுமைய பொறுப்பாளர்கள் அறிவுரை வழங்கினர்.
கோவை பாரதியார் பல்கலை கழகம் பேராசிரியர் டாக்டர் முத்தமிழ் செல்வன் அப்சர்வரராகவும்; மைய கண்காணிப்பாளராக ஏ.ஆர்.பி., பள்ளி முதல்வர் அரசு பெரியசாமியும் செயல்பட்டனர்.
ஒரு ஹாலுக்கு 24 பேர்
மொத்தம், 20 மையத்தில் தேர்வு நடந்தது. ஒரு அறைக்கு, 24 மாணவர்கள் அமர வைத்து தேர்வு நடத்தப்பட்டது.
ஒரு தேர்வு அறைக்கு, 2 கண்காணிப்பாளர் வீதம் மொத்தம், 40 பேர் கண்காணிப்பாளராக செயல்பட்டனர்.
காலை, 11:00 மணி முதல் மாணவர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மதியம், 2:00 மணிக்கு தேர்வு துவங்கியது.தேர்வு எழுத, 147 மாணவர்கள், 333 மாணவியர் என மொத்தம், 480 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 143 மாணவர்களும்; 319 மாணவியரும் என மொத்தம், 462 பேர் தேர்வு எழுதினர். 4 மாணவர்கள், 14 மாணவியர் என மொத்தம், 18 பேர் தேர்வு எழுதவில்லை.
வாழ்த்திய பெற்றோர்
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பெற்றோரும் பள்ளிக்கு வந்தனர்.
தேர்வு மையத்துக்கு செல்வதற்கு முன், ஹால்டிக்கெட் உள்ளிட்டவை எடுத்துக்கொள்ளவும், பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதவும் பெற்றோர், தங்களது பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்கினர்.
பள்ளி வளாகத்தின் முன் பெற்றோர், தங்களது பிள்ளைகளுக்கு, முத்தங்கள் கொடுத்து நன்றாக தேர்வு எழுதி வர வாழ்த்துக்களை தெரிவித்தனர்.