/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொகுதிக்கு 1 வீதம் 6 மாதிரி ஓட்டுச்சாவடிகள் வாக்காளர்களை ஈர்க்க அமர்க்கள ஏற்பாடு
/
தொகுதிக்கு 1 வீதம் 6 மாதிரி ஓட்டுச்சாவடிகள் வாக்காளர்களை ஈர்க்க அமர்க்கள ஏற்பாடு
தொகுதிக்கு 1 வீதம் 6 மாதிரி ஓட்டுச்சாவடிகள் வாக்காளர்களை ஈர்க்க அமர்க்கள ஏற்பாடு
தொகுதிக்கு 1 வீதம் 6 மாதிரி ஓட்டுச்சாவடிகள் வாக்காளர்களை ஈர்க்க அமர்க்கள ஏற்பாடு
ADDED : ஏப் 19, 2024 12:37 AM

கோவை;கோவை லோக்சபா தொகுதியில், சட்டசபை தொகுதிக்கு ஒன்று வீதம், 6 மாதிரி ஓட்டுச்சாவடிகள், 6 மகளிர் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை லோக்சபா தொகுதியில், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லுார், கவுண்டம்பாளையம், சூலுார், பல்லடம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில், தொகுதிக்கு ஒன்று வீதம் மாதிரி ஓட்டுச்சாவடி, மகளிர் ஓட்டுச்சாவடி, மாற்றுத்திறனாளிகள் ஓட்டுச்சாவடி, 18-19, 20-29 வயது வரையிலான இளைஞர்களுக்கான ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
மாதிரி ஓட்டுச்சாவடிகள்
பல்லடம் தொகுதியில் பணிக்கம்பட்டி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, சூலுாரில் வெங்கிட்டாபுரம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம் தொகுதியில் சிட்ரா பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, கோவை வடக்கு தொகுதியில் கணபதியில் உள்ள சி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளி, கோவை தெற்கு தொகுதியில் சுங்கம் நிர்மலா மகளிர் கல்லுாரி, சிங்காநல்லுார் தொகுதியில் பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் மாதிரி ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு மட்டும், 5,036 வாக்காளர்கள் ஓட்டளிக்க இருக்கின்றனர்.
மகளிர் ஓட்டுச்சாவடி
இதேபோல், மகளிர் மட்டும் பணிபுரியக்கூடிய ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. பல்லடம் தொகுதியில் காளிநாதம்பாளையம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, சூலுாரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு காளப்பட்டி சுகுணா கலை அறிவியல் கல்லுாரி, கோவை வடக்கு தொகுதிக்கு கணபதி சி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளி, கோவை தெற்கு தொகுதிக்கு சுங்கம் நிர்மலா மகளிர் கல்லுாரி, சிங்காநல்லுார் தொகுதிக்கு பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் மகளிர் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு பெண் ஊழியர்கள் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுவர். இந்த ஓட்டுச்சாவடிகளில், 5,453 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
காத்திருப்போருக்கு டோக்கன்
தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:
ஓட்டு போட வரும் வாக்காளர்களுக்கு இன்முகத்துடன் வரவேற்பு அளிக்கப்படும். ஓட்டளிக்க வரும் வாக்காளர்களுக்கு வழிகாட்ட கல்லுாரி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நிறுத்தப்படுவர். மகளிர் ஓட்டுச்சாவடியில் பெண் அலுவலர்கள் 'பிங்க்' நிற சேலை அணிந்து பணிபுரிவர். மாதிரி ஓட்டுச்சாவடிக்கு ஓட்டளிக்க வருவோருக்கு மரக்கன்று வழங்கப்படும்.
ஓட்டுப்பதிவு துவங்கியது முதல் முடிவடைந்து, 'சீல்' வைத்து, பெட்டியில் பூட்டி, வேனில் ஏற்றும் வரை, இரு வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்படும். நாளை (இன்று) காலை, 6:00 மணிக்கு, பூத் ஏஜன்ட்டுகள் முன்னிலையில், மாதிரி ஓட்டுப்பதிவு நடக்கும். அதன்பின், பதிவான ஓட்டுகள் அழிக்கப்பட்டு, சீலிடப்படும். சரியாக, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி, மாலை, 6:00 மணி வரை நடக்கும். அப்போது, வரிசையில் காத்திருப்போருக்கு மட்டும் டோக்கன் வழங்கி, ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

