/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூளையைத் தின்னும் அமீபா; கோவையில் கண்காணிப்பு
/
மூளையைத் தின்னும் அமீபா; கோவையில் கண்காணிப்பு
ADDED : ஜூலை 11, 2024 11:47 PM

கோவை : கேரளாவில் அமீபா தொற்று பரவலை அடுத்து, கோவையில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக, மூளையைத் தின்னும் புதிய வகை அமீபா தொற்று பரவி வருகிறது. இதனால் அங்கு, 14 வயது சிறுவன் உள்பட, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரமற்ற நீரில் குளிக்கும்போது, 'மெனிங்கோ என்செபாலிடிஸ்' என்ற அமீபா நுண்ணுயிரி, சுவாசப்பாதை வழியே ஊடுருவி, நேரடியாக மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
காய்ச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி, வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. இந்த பாதிப்பு ஏற்பட்டு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
மாவட்ட சுகாதார அலுவலர் அருணா கூறியதாவது:
கேரளாவில் அமீபா பாதிப்பு இருப்பதால், கோவையின் எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த அமீபா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவாது.
இதனால் சோதனை சாவடிகளில் பரிசோதனை தேவையில்லை. தேங்கிய நீர், சுகாதாரமற்ற, மாசடைந்த நீரில் பொதுமக்கள், குழந்தைகள் குளிக்கக்கூடாது. அனைத்து நீச்சல் குளங்களும் துாய்மையாக பராமரிக்க வேண்டும்.
காய்ச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி, வலிப்பு போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவோரை, தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.