/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவைக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கு! முன்னாள் கலெக்டர் கிராந்திகுமார் திட்டவட்டம்
/
கோவைக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கு! முன்னாள் கலெக்டர் கிராந்திகுமார் திட்டவட்டம்
கோவைக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கு! முன்னாள் கலெக்டர் கிராந்திகுமார் திட்டவட்டம்
கோவைக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கு! முன்னாள் கலெக்டர் கிராந்திகுமார் திட்டவட்டம்
ADDED : பிப் 23, 2025 02:50 AM

நம் மாவட்டத்தின், 183வது கலெக்டராக, கடந்த இரு ஆண்டுகள் பணியாற்றியவர் கிராந்திகுமார். சிறந்த மாவட்ட தேர்தல் அதிகாரியாக, மத்திய தேர்தல் ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர்.
அவருடனான நேர்காணலில் இருந்து...
முதல்நிலை நகரமாக கோவை மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இங்குள்ள மிகப்பெரிய சொத்து மனித வளம். ஒரு குடும்பம் ஓரிடத்தில் நிரந்தரமாக வசிக்க வேண்டுமென நினைத்தால், மருத்துவம் மற்றும் கல்வி வசதியை பார்ப்போம். 'டாப் லெவல்' கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இதன் காரணமாகவே, உலக அளவில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் கோவையை நோக்கி வருகின்றன. கோவையின் எதிர்காலம் 'பிரைட்டாக' இருக்கிறது.
தொழில்துறை வளர்ச்சி எப்படி இருக்கு...
தொழில்துறை செயல்பாடுகளை பார்த்தால், இந்த தொழில் தான் செய்வோம் என முடங்குவதில்லை பருத்தி, ஜவுளி, பம்ப், பவுண்டரி என முதலில் ஆரம்பிக்கப்பட்டன. அதன்பின், எந்த தொழில்துறைக்குள் நுழைந்தால் வளர்ச்சி இருக்குமென, இங்குள்ள தொழில்துறையினர் கணக்குப்போட்டு, சரியாக செயல்படுகின்றனர். ஏதேனும் ஒரு தொழிலுக்கு இறங்கு முகம் ஏற்பட்டாலும், நம்மால் கையாள முடிகிறது.
வேளாண்மை எப்படி இருக்கிறது; வளர்ச்சியை நோக்கி நகர்கிறோமா...?
தொழில்துறையை போல் வேளாண் துறையும் 'பிரண்ட்லி'யாக இருக்கிறது. ஆனால் வேளாண் பணிக்கு ஆட்கள் கிடைப்பது சவாலாக இருக்கிறது. டெக்னாலஜி, ஆட்டோமேட்டிக் சிஸ்டம் பயன்படுத்தினால், வேளாண் பணி சிறக்கும். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தால், நல்ல வருவாய் கிடைக்கும். நிறைய சவால்கள் இருக்கின்றன. என்றாலும், கடனுதவி வழங்குவது, பட்டா, சிட்டா வழங்குதல், பாசனத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தியுள்ளோம்.
மருத்துவ வசதி போதுமானதாக இருக்கிறதா...
கோவையில் ஐந்து மருத்துவ கல்லுாரிகள் இருக்கின்றன; இது, மிகப்பெரிய பலம். ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் முதியோருக்கு மருந்து, மாத்திரைகள் சென்றடைந்துள்ளன. மருத்துவ காப்பீடு அட்டை இல்லாமல் இருந்த, 50 ஆயிரம் குடும்பத்தினருக்கு பெற்றுக்கொடுத்தோம். மகப்பேறு சமயத்தில், ஒரு லட்சம் பிரசவத்துக்கு, 71 என்கிற எண்ணிக்கையில் உயிரிழப்பு இருந்தது; மாநில சராசரியோடு அதிகமாக இருந்தது. சிறப்பு முயற்சி எடுத்து, 23 என குறைத்திருக்கிறோம்.
உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை மேம்பட்டு உள்ளதா?
இரண்டு ஆண்டுகளில் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டியிருக்கிறோம். ஸ்மார்ட் கிளாஸ், இன்டர்நெட் வசதி ஏற்படுத்தியிருக்கிறோம். தேர்ச்சி பெறாத மாணவர்களை தேர்ச்சி அடைய வைக்க வேண்டுமென்பதே, எங்களது முனைப்பாக இருந்தது.
உயர் கல்வி கற்போருக்கு என்னென்ன வேலைவாய்ப்பு கிடைக்கும் என பயிற்சி அளித்தோம். இதற்கு முன் உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை, 75-78 சதவீதமாக இருந்தது; இந்தாண்டு, 95 சதவீதமாக உயர்ந்தது.
ஓராண்டில், 8,000-9,000 பேருக்கு கல்வி கடன் வழங்கினோம். கல்வி கட்டணமே செலுத்த முடியாத சூழலில் சில குடும்பங்கள் இருந்தன. என்.ஜி.ஓ.,க்கள் மூலமாக கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்தோம். நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது, கம்யூனிகேஷன் ஸ்கில் ஆகியவற்றில் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தோம்.
மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து?
மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தகவல் இல்லாமல் இருந்தது. ஆதார் அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுத்தோம். குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க, சி.எஸ்.ஆர்., நிதியில் வட்டார அளவில் மையம் கட்டியுள்ளோம்.
ஓராட்டுக்குப்பை என்ற இடத்தில், சி.எஸ்.ஆர்., நிதி பங்களிப்புடன் குடியிருப்பு கட்டப்படுகிறது; மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு, இலகுவாக வீடு எப்படி இருக்க வேண்டுமோ, அதன்படி உருவாக்கப்படுகிறது. திடீரென முடங்கி விடும் மாற்றுத்திறனாளிகளின் உடல் நலன் காக்க, விளையாட்டு முக்கியம் என்பதால், கூடைப்பந்து, துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
என்.ஜி.ஓ.,க்கள் ஒத்துழைப்பு எப்படி இருந்தது...?
இங்குள்ள என்.ஜி.ஓ., பிரதிநிதிகள் சொல்லும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. ஒவ்வொரு திட்டத்தையும் எவ்வாறு செயல்படுத்தலாம் என சொல்லும் ஆலோசனை, பங்களிப்பு பயனளிக்கிறது. ஒரு குளத்தை மக்கள் பங்களிப்புடன் தன்னார்வ அமைப்பினர் துார்வாரும்போது, நீர் நிலையை பாதுகாக்க வேண்டுமென்கிற எண்ணம் உருவாகிறது; மீண்டும் குப்பை கொட்ட மனசு வராது. நிறைய 'ப்ராஜெக்ட்' எடுத்து, அவர்களே செய்திருக்கின்றனர்.
அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டீர்களா...
கண்டிப்பாக இல்லை. விதிமுறைப்படி என்ன செய்ய முடியும்; என்ன செய்ய முடியாது என்பதை விளக்குகிறோம். மக்கள் பிரச்னைக்காக வந்தபோது, எந்தவொரு விஷயமாக இருந்தாலும், வெளிப்படையாக பேசினார்கள். அதன் காரணமாகவே, எந்த திட்டத்திலும் சிக்கல் வரவில்லை.

