ADDED : பிப் 26, 2025 04:19 AM

சிவராத்திரி நாளான இன்று, சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெற, பக்தர்கள் விரதமிருந்து வழிபாடு செய்கின்றனர்.
இன்று ஒருநாள் இரவு, சிவ பக்தர்கள் இரவு முழுக்க கண்விழித்து, சிவபெருமானை நினைத்து பூரண கும்பங்களை வைத்து வழிபடுகின்றனர்.
மகா சிவராத்திரி மகிமை நிறைந்தது. சிவராத்திரி நாளில் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டால், ஓராண்டு முழுக்க சிவபூஜை செய்த புண்ணியம் கிடைக்கும். இதன் மகிமைகள் கருட, அக்னி, கந்த, பத்ம, அருணாசல, சிவ, புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.
சிவராத்திரி விரதத்தை பின்பற்றி மகாவிஷ்ணு, மகாலட்சுமி சக்கர ஆயுதத்தை பெற்றனர், பிரம்மா, சரஸ்வதியை பெறும் பாக்யம் அடைந்தார். நந்தியம் பெருமான் சிவராத்திரி மகிமை எடுத்துக் கூறியதை அடுத்து முருகன், சூரியன், சந்திரன், மன்மதன், இந்திரன், அக்னி, குபேரன் ஆகியோர் நல்ல வரங்களைப் பெற்றனர் என்று, புராணங்கள் சொல்கின்றன.
மகாசிவராத்திரி நாளில், பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்த போது பொங்கி வந்த, ஆலகால விஷம், மண்ணுலக மக்களை பாதிக்கக் கூடாது என்று எண்ணிய சிவபெருமான், ஆலகால விஷத்தினை தனது உடலினுள் தாங்கி, நீலகண்டனாக மாறி உலகத்தை அழிவில் இருந்து காப்பாற்றியது, சிவராத்திரி நாளில் தான்.
சிவாலயங்களில் இன்று நான்கு ஜாமங்களிலும், நான்கு கால பூஜை நடைபெறும். வில்வ அர்ச்சனை மிகவும் உகந்தது. சிவராத்திரி நாளில் மேற்கொள்ளும் விரதத்தின் பெருமையை, வேறு எந்த விரதத்துடனும் ஒப்பிட முடியாது. இந்நாளில், சிவபெருமானை வழிபட்டு அருளை பெறுவோம்.

