/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் மதிய உணவு உண்ண 'ஷெட்' வேண்டும்
/
அரசு பள்ளியில் மதிய உணவு உண்ண 'ஷெட்' வேண்டும்
ADDED : ஆக 01, 2024 01:42 AM

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் அரசு துவக்கப்பள்ளியில், மதிய உணவு உண்பதற்கு போதிய இட வசதி இல்லாததால், 'ஷெட்' அமைக்க வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 54 அரசு துவக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், தொண்டாமுத்தூரில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில், 2 அங்கன்வாடி மையமும், துவக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகின்றன.
இங்கு, சுமார், 200 குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், காலை மற்றும் மதிய உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வகுப்பறை முன் உள்ள திண்ணையில் அமர்ந்து, மாணவர்கள் உணவு உண்கின்றனர்.
தற்போது, மழைக்காலம் என்பதால், பள்ளி மைதானம் முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால், மாணவர்கள் குறுகிய இடத்தில் அமர்ந்து உணவு உண்ணும் நிலை உள்ளது.
இப்பள்ளி வளாகத்தில், தாராளமாக காலி இடம் உள்ளதால், சத்துணவு சமையற்கூடம் அருகிலேயே, ஒரு 'ஷெட்' அமைத்தால், அங்கு மாணவர்கள் வசதியாக அமர்ந்து உணவு உண்ணவும், பள்ளியில் விழாக்களை நடத்தவும் பயனுள்ளதாக அமையும். எனவே, மாணவர்கள் உணவு உண்ண, தனி 'ஷெட்' அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.