/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்துக்கு ஒரு வழிப்பாதை... போலீஸ் எச்சரிக்கையை மீறுவதில் ஒரு போதை!
/
போக்குவரத்துக்கு ஒரு வழிப்பாதை... போலீஸ் எச்சரிக்கையை மீறுவதில் ஒரு போதை!
போக்குவரத்துக்கு ஒரு வழிப்பாதை... போலீஸ் எச்சரிக்கையை மீறுவதில் ஒரு போதை!
போக்குவரத்துக்கு ஒரு வழிப்பாதை... போலீஸ் எச்சரிக்கையை மீறுவதில் ஒரு போதை!
ADDED : மார் 25, 2024 01:04 AM

''அபராதமா கட்டுனா 500 ரூபா...அண்ணன் கையில கொடுத்தா வெறும் 200 ரூபா... எது வசதி?''
- இப்படிக் கேட்டால் யார் அபராதம் கட்டுவார்கள்...ஏற்கனவே சட்டத்தை மதிக்காமல் ஒரு வழிப்பாதையில் வந்தவர்களுக்கு, லஞ்சம் கொடுப்பதில் என்ன சங்கடம் இருக்கப் போகிறது...அதனால் தான் கொடுப்பதைக் கொடுத்து விட்டு, வண்டியை எடுத்துக் கொண்டு, மீண்டும் அதே விதிமீறலைத் தொடர்கிறார்கள்.
இதுதான் இப்போது கோவையில் அடிக்கடிநடக்கிற 'சம்பவமாக' இருக்கிறது.
அசுர வேகத்தில் வாகனத்தில் பறப்பது, ஒரே இரண்டு சக்கர வாகனத்தில் 3, 4 அல்லது 5 பேர் பயணிப்பது, 'நோ பார்க்கிங்'கில் வண்டியை நிறுத்துவது, குறுகலான ரோட்டில் இரு புறமும் கார்களை நிறுத்திக் கொண்டு, போக்குவரத்தைத் தடை செய்வது, ஹெல்மெட், சீட் பெல்ட் போடாமல் வாகனங்களை இயக்குவது... இப்படி எல்லாப் போக்குவரத்து விதிமீறல்களும், கோவையில் சர்வசாதாரணமாகி விட்டது.
இந்தியாவில் அதிக விபத்து நடக்கும் மாநிலங்களில், தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதும், தமிழகத்தில் அதிக விபத்து உயிரிழப்புகள் நடக்கும் மாவட்டமாக, கோவை பதிவாகியிருப்பதும் இதனால்தான்.
குறிப்பாக, பல லட்சம் வாகனங்கள் வலம் வரும் கோவை மாநகரப் பகுதியில், இந்த விதிமீறல்கள், சமீபகாலமாக உச்சம் தொட்டுக் கொண்டிருக்கின்றன.
அதற்குக் காரணம், போக்குவரத்து போலீசாரின் மெத்தனமும், வசூல் வேட்டையும் தான். அதிலும் முக்கியமாக, கோவை நகருக்குள் ஒரு வழிப்பாதைகளில் வேண்டுமென்றேயும், வேகமாகவும் வரும் வாகனங்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் சட்டத்தை மதித்து, உரிய வழியில் வருவோரும் விபத்துக்குள்ளாகி, உயிரிழக்கவும், காயமடைந்து முடங்கவும் வேண்டியுள்ளது.
ஒரே ஒரு தடுப்பை வைத்து, அதில் 'நோ என்ட்ரி' ரூ.500 அபராதம்' என்று எழுதி வைத்து விட்டால், எல்லோரும் அதை மதித்துப் போக மாட்டார்கள் என்று, மாநகர போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கோவை மக்கள் மீது, அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பெரிது. ஆனால் இப்போது கோவையில் விதிகளை மீறுவோர் எண்ணிக்கை அதை விட பெரியது.
அதனால் எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல், பரிந்துரையையும் ஏற்றுக் கொள்ளாமல், ஒரு வழிப்பாதையில் வருவோரை, உடனுக்குடன் அபராதம் விதித்துத் தண்டிக்க வேண்டியது, மாநகர போலீசின் மிக முக்கியக் கடமையாகும்.
ஆனால் 'சிக்னல்' களைக் குறைத்துள்ள மாநகர போலீஸ், போக்குவரத்தைக் கண்காணிக்கும் போலீஸ் எண்ணிக்கையையும், குறைத்து விட்டதாகத் தெரிகிறது.
சந்திப்புகளில், 'மாநகர காவல் ஆணையரின் அன்பான வேண்டுகோள்' என்று, தொடர்ச்சியாக மக்களுக்கு பல வேண்டுகோளை விடுப்பது, நல்ல விஷயம் தான்.
அதைப் பொருட்படுத்தாதவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டியது, அதை விட முக்கியம். ஒவ்வொரு முறை சுட்டிக்காட்டும்போதும், நாலு நாள் மட்டும் இதைச் செய்யாமல், என்றென்றும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதே, இதற்கு நிரந்தரத் தீர்வு.
பத்து நாட்கள் கொத்தாகப் பிடித்து, மொத்தமாய் அபராதம் விதித்தால், அதன்பின் ஒரு வண்டியும் ஒரு வழிப்பாதையில் நுழையாது!

